தென்கிழக்கு ஈரானின் எல்லைப் பகுதியில் 7.8 அளவு நிலநடுக்கம், பாக்கித்தானில் பலர் உயிரிழப்பு
புதன், ஏப்பிரல் 17, 2013
- 26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்பிரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 29 செப்டெம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
பாகித்தானின் எல்லைப் பகுதியில் தென்கிழக்கு ஈரானில் நேற்று இடம்பெற்ற 7.8 அளவு பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பாக்கித்தானின் பலுச்சித்தான் மாகாணத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 150 பேர் காயமடைந்தனர். இந்நிலநடுக்கத்தினால் இந்தியா, மற்றும் பல அரபு நாடுகளில் கட்டடங்கள் அதிர்ந்தன.
நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 3:14 மணிக்கு ஈரானின் சிஸ்தான் பலுச்சித்தான் மாகாணத்தில் காஷ், சரவான் ஆகிய நகரங்களுக்குக் கிட்டவாக 95 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.
"பாலைவனப் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொன்டிருந்ததால், ஈரானிய நகரங்களில் உயிரிழப்புகள் எதுவும் இடம்பெறவில்லை," என ஈரானிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மிக ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தரைப்பகுதியில் 4.0 அளவுக்கே அங்கு நில அதிர்வு உணரப்பட்டதாக அவர் கூறினார். இப்பகுதியில் தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தமது நிவாரணப் பணியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர் என ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
ஆனாலும், பாக்கித்தானில் மாஷ்கெல் மாவட்டத்தில் உயிரிழப்புகளும் சேதங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் பல இடிந்து வீழ்ந்துள்ளதால் இராணுவத்தினரும் நிவாரணப் பணியாளர்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்றைய நிலநடுக்கத்தின் பின்னரும் அங்கு நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை 5.7 அளவு நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவும் ஐக்கிய நாடுகளும் உதவிக்கு விரைந்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய் நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
கடந்த வாரம் ஏப்ரல் 10 இல் ஈரானின் தென்மேற்கில் புசேர் என்ற இடத்தில் அணுவுலை உள்ள பகுதியில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியிருந்ததில் 37 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
அராபியா, யூரேசியா ஆகிய கண்டத் தட்டுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வினாலேயே நேற்றைய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அராபியாத் தட்டு ஆண்டுதோறும் வடக்கு நோக்கிப் பல சென்டிமீட்டர்கள் தூரம் நகர்ந்து வருகிறது.
மூலம்
தொகு- Pakistani troops in rescue effort after Iran quake, பிபிசி, ஏப்ரல் 17, 2013
- Pakistan bears brunt of Iranian earthquake, 35 killed, ராய்ட்டர்ஸ், ஏப்ரல் 16, 2013