நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனை இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கின

சனி, ஆகத்து 17, 2013

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பெருமளவில் சேதங்களோ அல்லது உயிரிழப்புக்களோ அறிவிக்கப்படவில்லை.


நியூசிலாந்து

6.5 அளவிலான முதலாவது நிலநடுக்கம் தெற்குத் தீவின் செடன் நகரில் நேற்று பிற்பகல் 2:31 மணிக்கு ஏற்பட்டது. மேலும் ஓர் அதிர்வு 5.7 அளவில் இடம்பெற்றது.


இவற்றின் அதிர்வுகள் நியூசிலாந்தின் மத்திய பகுதிகள் முழுவதும் உணரப்பட்டது. தலைநகர் வெலிங்டனில் பணிமனைகள் மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் தமது பணியிடங்களை விட்டு வெளியேறினர். மின்சாரத் தடை ஏற்பட்டது. போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டன.


வணிக அங்காடிகளில் பொருட்கள் தட்டுகளில் இருந்து வீழ்ந்தன. சாளரங்கள் அதிர்ந்தன. ஆனாலும் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சாலைகளில் பெரும் வெடிப்புகள் ஏற்பட்டன.


கடந்த மாதம் வெலிங்டனில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் நியூசிலாந்து நாடாளுமன்றம் சேதமடைந்தது. 2011 பெப்ரவரியில் கிறைஸ்ட்சேர்ச் நகரில் இடம்பெற்ற 6.3 அளவு நிலநடுக்கத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர்.


நியூசிலாந்து பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளதால், நிலநடுக்கங்கள் அங்கு அடிக்கடி இடம்பெறுகின்றன. நியூசிலாந்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 14,000 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் 20 அதிர்வுகள் 5.0 ரிக்டருக்கு அதிகமானவையாகும்.


மூலம்

தொகு