நியூசிலாந்தில் 6.5 அளவு நிலநடுக்கம், நாடாளுமன்றம் சேதம்

ஞாயிறு, சூலை 21, 2013

நியூசிலாந்தை இன்று ஒரு நிமிட நேர நிலநடுக்கம் தாக்கியதில் தலைநகர் வெலிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்றம் சேதமடைந்தது. உயிரிழப்புகள் ஏதும் இடம்பெறவில்லை.


பசிபிக் எரிமலை வளையம்

6.5 அளவு நிலநடுக்கம் இன்று மாலை உள்ளூர் நேரம் 17:09 மணிக்கு இடம்பெற்றது. தலைநகரின் தெற்குக் கரையில் இருந்து 57 கிமீ தூரத்தில் 6.3 மைல்கள் ஆழத்தில் இந்நிலநடுக்கம் நிலை கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆக்லாந்து நகரம் வரை நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.


சுனாமி அறிவித்தல் ஏதும் விடுக்கப்படவில்லை. மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டன. வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து நொருங்கின. தண்ணீர்க் குழாய்கள் சில வெடித்தன. வீதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.


நியூசிலாந்து பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளதால், நிலநடுக்கங்கள் அங்கு அடிக்கடி இடம்பெறுகின்றன. நியூசிலாந்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 14,000 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் 20 அதிர்வுகள் 5.0 ரிக்டருக்கு அதிகமானவையாகும்.


2011 பெப்ரவரியில் கிறைஸ்ட்சேர்ச் நகரில் இடம்பெற்ற 6.3 அளவு நிலநடுக்கத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

தொகு