தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

சனி, மார்ச்சு 13, 2010

இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.


இந்நிகழ்வு யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.


போருக்கு பின் அரசியல் தீர்வு, மக்களின் உடனடித் தேவைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை இந்த அறிக்கை கூறுகிறது.


வடக்கு, கிழக்கு மீண்டும் ஒன்றிணைந்த மாகாணமாக சமஷ்டி அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்றும், அது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவர்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது.


தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதுடன் அவர்கள் இலங்கைத்தீவில் ஏனைய இனத்தவருடன் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகவும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அதிகாரப் பகிர்வுக்கான முக்கியமான அம்சமாக கொள்ளப்படுதல் வேண்டும்.

அத்துடன்,நிலம், சட்டம், ஒழுங்கு ,கல்வி, சுகாதாரம், சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள், நிதி என்பனவற்றுக்கான அதிகாரங்களைக் கொண்டதாகவும் அதிகாரப்பகிர்வு அமையவேண்டுமெனவும் அறிக்கையில்ல் வலியுறுத்தப்பட்டுள்ளது.


வட,கிழக்கில் வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஏற்பாடு செய்தல், உயர்கல்வி வசதிக்கான ஏற்பாடுகள் வட,கிழக்கு இராணுவ சூன்யப்பகுதியாக்குதல்,இடம்பெயர்ந்த மக்களை கௌரவமான முறையில் மீளக்குடியமர்த்துதல், தடுப்பு காவலில் குற்றம் சுமத்தப்படாதிருப்பவர்களை விடுவித்தல், ஏனையோருக்கு பொதுமன்னிப்பு போன்ற வலியுறுத்தல்களும் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள அறிக்கையில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு,சமஷ்டி அரசியல் அமைப்புக்கான கோரிக்கை, பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், அரச குடியேற்றங்கள் அரசியலமைப்புகள், தரப்படுத்தல், தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், அதிகாரப்பகிர்வு ஒழுங்குமுறைகள், விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகள், 2010 ஜனாதிபதித் தேர்தல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.


அதேசமயம், தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்வதும் அதனை வெளிப்படுத்துவதுமே இன்றைய அத்தியாவசியத் தேவையென அறிக்கை வலியுறுத்தியறுத்துகிறது.

மூலம் தொகு