தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தனித்துப் போட்டி

ஞாயிறு, பெப்பிரவரி 28, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. சிவாஜிலிங்கம், என். சிறீகாந்தா ஆகியோர் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியென்றபடியால் தேர்தல் ஆணையாளரின் அங்கீகார அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் குடைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.


யாழ்.மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் க.நமநாதன், பொன்.பூலோகசிங்கம் உட்பட மூன்று பட்டதாரிகள் ஏனைய பல்துறைகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகின்றனர்.அத்துடன் இந்த வேட்பாளர் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவரும் போட்டியிடுகின்றார்.


இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ள இன்னுமொரு கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (சைக்கிள் சின்னம்) யாழ்ப்பாணம், மற்றும் திருகோணமலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. பொருளியல் ஆசிரியர் சின்னத்துரை வரதராஜனை தலைமை வேட்பாளராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் வேட்புமனுப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இவருடன் கலாநிதி விஐயரட்ணம் ஜோன் மனோகரன் கென்னடி (முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்), வைத்தியகலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி, சந்தனம் ஸ்ரீபன் (கடற்தொழில்), நடேசு துரைராஜா (விவாகப் பதிவாளர்), நாகலிங்கம் குழந்தைவேலு, விஸ்வலிங்கம் மணிவண்ணன் (மாணவன்), பிரான்சிஸ் வின்சன் டீ போல் (வியாபாரி), செல்லத்துரை சுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்), பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ.), செல்வராசா கஜேந்திரன் (முன்னாள் நா.உ.), கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம் (பொதுச் செயலாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)

மூலம்