தமிழ் அகதிகள் மெராக் துறைமுகத்தை விட்டு வெளியேறினர்

திங்கள், ஏப்பிரல் 19, 2010

கடந்த ஆறு மாத காலமாக இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் படகொன்றில் தங்கியிருந்த இருநூறுக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் இன்று துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டனர்.


இவர்கள் அனைவரும் இந்தோனேசியாவின் தடுப்பு முகாம்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


அடுத்த 12 மாதங்களில் தமது மீள்குடியேற்றத்துக்கு ஆத்திரேலிய அரசு முயற்சிகளை எடுக்கும் என்ற உத்தரவாதத்தின் பேரிலேயே தாம் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக துறைமுக அகதிகளின் பேச்சாளரான நிமால் என்பவர் தெரிவித்தார்.


“இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரி சுஜத்னமிக்கோ என்பவர் ஆத்திரேலிய அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்ததாகவும், 12 மாதங்களில் தம்மை மீள்குடியேற்ற ஆத்திரேலியா அவருக்கு உறுதி கூறியதாக அவர் தமக்குத் தெரிவித்ததாகவும்” நிமால் ”தி ஆஸ்திரேலியன்” பத்திரிகைக்குக் கூறினார்.


இந்த வாக்குறுதி அண்மையில் ஆத்திரேலியா அரசு அறிவித்திருந்த இலங்கை அகதிகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை இடைநிறுத்தும் முடிவுக்கு எதிர்மாறானதாக இருக்கிறது என செய்தியாளர் தெரிவிக்கிறார்.


தம்மை ஆத்திரேலியாவில் மீளக் குடியேற அனுமதிக்கும் வரை தாம் கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை எனக் கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள்.


கிட்டத்தட்ட 200 இலங்கை அகதிகள் தற்போது ஜகார்த்தா விமான நிலையத்தை நோக்கி பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் பிபிசிக்குத் தெரிவித்தார்.


தடுப்பு முகாம்களில் அவர்களின் ஒவ்வொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படும் எனவும் வேறு எந்தவிதமான உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம் தொகு