டேம் 999 படத் தடைக்கான விளக்கத்தை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் காலக்கெடு

ஞாயிறு, சனவரி 15, 2012

தமிழ்நாட்டில் திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய டேம் 999 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் எத்தகைய சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.


மலையாள இயக்குனர் சோகன் ராய் இயக்கிய டேம் 999 படத்தைத் திரையிட தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து, படத்தின் இயக்குநர் சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள், ஏ.கே. கங்குலி மற்றும் ஜி.எஸ். கெஹர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


இயக்குநர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபக் பிரகாஷ், அந்தத் திரைப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், அதன் மீதான தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக அரசு சார்பில் வாதாடிய கிருஷ்ண குமார், சர்ச்சைகள் நிறைந்த டேம் 999 திரைப்படம் தமிழகத்தில் வெளியானால் சட்டம் ஒழுங்குப் பாதிக்கப்படும் நாட்டில் அமைதி சீர்கெடும் என்பதை கருத்தில் கொண்டே படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது என்றார்.


இதனையடுத்து, தெளிவான விசாரணைக்கு பிறகு. டேம் 999 படத்தில் கலாசார, மத உணர்வுகளை தூண்டும் விதத்திலோ, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அதை இந்த நீதிமன்றம் புரிந்து கொள்ளும். அப்படி இல்லாதப்பட்சத்தில் படம் திரையிடப்படுவதற்கு ஏன் தடைவிதிக்கப்பட வேண்டும் என்றும், படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதால் எத்தகைய சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதையும் அரசு எழுத்து மூல விளக்கம் வருகிற 25ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்வருகிற பிப்ரவரி 7ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


டேம் 999 திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்தில் பழைய அணை ஒன்று உடைந்து பெரும் சேதம் ஏற்படுத்துவதைப் போன்ற காட்சிகள் உள்ளதாகவும், அது முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் எனறும் தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பியது.


மூலம் தொகு