பழம்பெரும் இயக்குனர் கைலாசம் பாலசந்தர் காலமானார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், திசம்பர் 23, 2014

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கைலாசம் பாலசந்தர், சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84.


இயக்குனர் சிகரம் என்றழைக்கப்பட்ட பாலசந்தர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930ம் ஆண்டு சூலை 9ம் நாளில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 101 திரைப்படங்களை இயக்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஏஆர் ரகுமான் சுஜாதா, ஷோபா, விவேக் என ஏறத்தாழ அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்பட நடிகர் நடிகையர்களை அறிமுகப்படுத்தியவர்.


தன் படத்தில் சமுதாயத்திற்கான செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்து படங்களையும் எடுத்தார். பெண்கள் சமுதாயத்தின் பிரச்சினைகளை உரத்த குரலில் பேசியது இவரது சில படங்கள். மது அருந்தும் பழக்கத்தின் தீமைகளை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்டிய பாலசந்தர், சமுதாயத்திற்காக தன்னலமற்று உழைக்க வேண்டிய கடமையையும் அப்படத்தின் மூலம் உணர்த்தினார்.


இவரது மறைவிற்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமக தலைவர் நடிகர் சரத்குமார், மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பட பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர். இவரது மறைவு காரணமாக, புதன்கிழமையன்று (திசம்பர் 24, 2014) தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்படுவதாக இயக்குனர் விக்ரமன் அறிவித்தார்.



மூலம்

தொகு