டேம் 999 திரைப்படத்துக்கான தமிழக அரசின் தடையை எதிர்த்து இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, திசம்பர் 2, 2011

சர்ச்சைக்குரிய டேம் 999 என்ற ஆங்கிலத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்குத் தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 24 ம் திகதி தடை விதித்ததை எதிர்த்து அப்படத்தின் இயக்குனர் சோகன் ராய் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


முல்லைப்பெரியாறு அணை போன்ற அணை ஒன்று உடைவது போன்றும், அதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவது போன்றும் எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. அந்தத் திரைப்படம், மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, தமிழக மற்றும் கேரள மக்களிடையே இணக்கப்பாட்டைக் குலைத்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், அதை தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 திரையிடப்பட்டது. தற்போது தமிழக அரசின் தடையை எதிர்த்து படத்தின் இயக்குனர் சோகன் ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவித்த போது பிரேசில், சீனா போன்ற நாடுகளில் அணைகள் உடைந்ததால் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் டேம் 999 படத்தை எடுத்தேன். அதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதமை நியாயமற்றது. இதை எதிர்த்தே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.


கடந்த மாதம் 24ம்திகதி டேம் 999 படத்தின் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்ற நேரத்தில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சோகன் ராய் பேட்டியளித்த போது 'தமிழக அரசின் நடவடிக்கை முற்றிலும் துரதிருஷ்டவசமானது என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் படைப்பாற்றலை அழித்து விடும் என்றும் ஏற்கனவே டேம் 999 படத்தை திரையிட தணிக்கைக் குழு அனுமதி அளித்துள்ள நிலையில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளேன்' என்றும் கூறியிருந்தார்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு