டாக்காவில் எட்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 82 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஏப்பிரல் 24, 2013

வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் எட்டு-மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளனர் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


இடிபாடுகளிடையே சிக்குண்டவர்களை மீட்கும் பணி இராணுவத்தினரின் உதவியுடன் மிக்க சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


இக்கட்டடத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்று, வங்கி, மற்றும் பல வணிக நிறுவனங்கள் அடங்கியிருந்தன. இடிபாடுகளிடையே சிக்குண்டவர்களில் தமது உறவினர்களையும், நண்பர்களையும் தேடிப் பலர் அங்கு படையெடுத்துள்ளனர்.


கட்டடம் இடிந்ததற்கான காரணம் அறிவிக்கப்படவில்லையாயினு, நேற்று செவ்வாய்க்கிழமை கட்டடத்தில் சிறிது வெடிப்பு அவதானிக்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இன்று புதன்கிழமை காலையில் மக்கள் கூடியிருந்த நேரத்தில் கட்டடத்தின் பின்பகுதி திடீரென குலைந்து விழ ஆரம்பித்ததாகவும், பின்னர் சிறிது நேரத்தில் முழுக் கட்டடமும் இடிந்து வீழ்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டடத்தின் கீழ்மாடி மட்டுமே உடையாமல் இருந்தது.


எதிர்க்கட்சிகளினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டுப் பின்போடப்பட்டுள்ளது.


கடந்த நவம்பரில் டாக்காவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 110 பேர் கொல்லப்பட்டனர். 2010 ஆம் ஆண்டில் டாக்காவில் நான்கு மாடிக் கட்டம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 25 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

தொகு