சாட் முன்னாள் அரசுத்தலைவரை நாடு கடத்த பெல்ஜியம் கோரிக்கை

திங்கள், மார்ச்சு 12, 2012

மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக சாட் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் இசானி ஹாப்ரே என்பவரை நாடுகடத்த பெல்ஜியம் தாக்கல் செய்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை சர்வதேச நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.


1982-1990 காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான எதிர்த்தரப்பு மக்களைக் கொலை செய்யவும், சித்திரவதை செய்யவும் உத்தரவிட்டதாக 69 வயதாகும் திரு. ஆப்ரே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் பினோச்சே என வர்ணிக்கப்படும் இவர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.


1990 ஆம் ஆண்டில் அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டது முதல் இவர் செனெகல் நாட்டில் வாழ்ந்து வருகிறார். 2005 ஆம் ஆண்டில் கைது செய்யப்படாலும், அவருக்கு இதுவரையில் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. பெல்ஜியம் அவரை நாடு கடத்த நான்கு தடவைகள் கோரியிருந்தது, ஆனாலும் செனெகல் அவரை நாடு கடத்த மறுத்து வந்துள்ளது. இதனை அடுத்தே பெல்ஜியம் தற்போது ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.


2008 ஆம் ஆண்டில் சாட் அரசைக் கவிழ்ப்பதற்குத் திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டி ஹாப்ரேக்கு சாட் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. அவரது எட்டாண்டு கால ஆட்சியில் 40,000 பேரின் இறப்பிற்கு இவர் காரணமாக இருந்தார் என 1992 ஆம் ஆண்டில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஹாப்ரே மீது வழக்குத் தொடுக்க வேண்டும் அல்லது அவரை விசாரணை செய்வதற்காக வேறு நாடொன்றுக்கு நாடு கடத்த வேண்டும் என செனெகல் அரசை ஆப்பிரிக்க ஒன்றியம் கடந்த ஆண்டு கேட்டிருந்தது.


மூலம் தொகு