காணாமல் போன உருசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் ஜாவா அருகே கண்டுபிடிக்கப்பட்டன

வியாழன், மே 10, 2012

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து நேற்றுப் புறப்பட்ட உருசியாவின் சுகோய் ஜெட் விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் விமான நிலையத்துடனான தொடர்பை இழந்தது. பின்னர் விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விமானத்தின் உடைந்த பாகங்களும் எரிந்த சில உடல்களும் மேற்கு ஜாவா அருகே மலைப்பகுதியில் உலங்கூர்திகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணம் செய்த 50 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


எட்டு உருசிய விமானிகள், விமானப்பணியாளர்கள், இந்தோனேசிய விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊடகவியாலாளர்கள் ஆகியோர் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஏனையோரைத் தேடும் பணி பணி முடுக்கி விடப்பட்டுள்ளது, எனினும் மோசமான வானிலை காரணமாக தேடும் பணி தொய்வடைந்துள்ளதாகாக் கூறப்படுகிறது.


இதுவரை சுகோய் நிறுவனம் போர் விமானங்களை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது பயணிகள் விமானத்தை தயாரித்து சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது. இவ்விமானத்தில் 100 பேர் வரை பயணம் செய்யலாம். சுகோய் நிறுவனத்துடன் இதன் தயாரிப்பில் இத்தாலியின் ஃபின்மெச்சானிக்கா மற்றும் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்தோனேசியாவிற்கு இத்தகைய 42 விமானங்களை சுகோய் நிறுவனம் விற்கவிருந்தாகக் கூறப்படுகிறது.


மூலம் தொகு