கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: சில காட்சிகள் நீக்கப்பட்டு தமிழகத்தில் திரையிடப்படும்

ஞாயிறு, பெப்பிரவரி 3, 2013

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படம் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக கமல் ஹாசன் செய்தியாளர்களிடம் நேற்றுத் தெரிவித்தார். கடந்த மாதம் இத்திரைப்படம் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனாலும் தமிழக அரசு இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.


படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த சில முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேற்று சனிக்கிழமை இரவு அரசுச் செயலகத்தில் சுமார் நான்கு மணி நேரம் கலந்துரையாடிய பின்னர் கமல் ஹாசன் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், படத்தில் வரும் ஏழு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும், அதன் பின்னர் தணிக்கைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.


தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் ஆர். இராஜகோபால் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. கமல் ஹாசன் தரப்பில் அவரின் சகோதரர் எஸ். சந்திரஹாசன் கலந்துகொண்டார். முஸ்லிம் அமைப்புகளின் தரப்பில் 'தமிழ்நாடு முஸ்லிம் சமூக, அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு' மற்றும் 'தமிழ்நாடு தொவீத் ஜமாத்' அமைப்புகளின் உறுப்பினர்கள் 15 பேர் கலந்துகொண்டனர்.


"இப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உதவிய தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். படக்காட்சிகளில் சில மாற்றங்களைச் செய்து வெளியிட முஸ்லிம் தலைவர்களும் நானும் உடன்பட்டுள்ளோம்,” என்றார் கமல் ஹாசன். எந்தெந்த ஒலிக்கீற்றுக்கள் நீக்கப்படுகின்றன என்பது குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்நிலையில், இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்த கமல் ஹாஸன், திரைப்படம் வெளியாகும் திகதியை விரைவில் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


விஸ்வரூபம் திரைப்படம் சனவரி 25 ஆம் நாள் தமிழ்நாடு, கருநாடகம், கேரள மாநிலங்கள், இலங்கை, மலேசியா தவிர்த்த ஏனைய நாடுகளில் குறித்த நாளில் வெளியிடப்பட்டது. கருநாடகம், ஆந்திரா, கேரள மாநிலங்கள் பின்னர் அதற்கிருந்த தடையை நீக்கின. இலங்கையில் இன்னும் இத்தடை அமுலில் உள்ளது. உலக நாடுகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் மண்டபம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு