உருசிய விமானம் 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, அக்டோபர் 31, 2015

224 பேருடன் சென்ற உருசிய விமானம் ஒன்று எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக எகிப்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.


கோலாவியா 9268 விமானம்

மேற்கு சைப்பீரிவாவைச் சேர்ந்த கொகலிமாவியா என்ற சிறிய விமான நிறுவனம் ஒன்றின் மெட்ரோஜெட் 9268 ஏர்பஸ் ஏ-321 விமானம் செங்கடல் சுற்றுலா மையமான சார்ம் எல்-சேக் என்ற இடத்தில் இருந்து உருசியாவின் சென் பீட்டர்சுபுர்க் நகர் நோக்கி இன்று காலையில் புறப்பட்டு 23 நிமிட நேரத்தில் காணாமல் போனது. இவ்விமானத்தில் 17 சிறுவர்கள் உட்பட 217 பயணிகளும், 7 பணியாளரும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் உருசிய சுற்றுலாப் பயணிகள் ஆவர்.


9,000 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போதே ராடார்களில் இருந்து அவ்விமானம் மறைந்ததாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் சிதைவுகள் அசானா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு உள்ளதாக விமானி எகிப்தியத் தரைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அறிவித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என எகிப்தியப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தீவிரவாதிகளின் நடமாட்டங்கள் அதிகரித்திருந்தன. பல்வேறு தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

இவற்றையும் பார்க்க

தொகு

மூலம்

தொகு