உருசிய விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், சூன் 21, 2011

வடமேற்கு உருசியாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்தனர். 10 வயதுச் சிறுவன், ஒரு பெண் விமான சிப்பந்தி உள்ளிட்ட 8 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அவர்களில் 7 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உருசியாவில் கரேலியா குடியரசு

உருசியத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 9 ஊழியர்கள் உள்ளிட்ட 52 பேருடன் வந்த தூப்போலெவ்-134 ரக ருஸ்ஏர் விமானம் நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 2340 மணியளவில் கரேலியா குடியரசில் பெத்ரசவோத்ஸ்க் விமானநிலையத்தில் பனி மூட்டத்துக்கு இடையே தரையிறங்க முயன்ற போது ஓடுபாதையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சாலை அருகே மோதி தீப்பற்றியது.


விபத்து நடந்தபோது விமான நிலைய ஓடுபாதையில் பனி மூட்ட விளக்குகள் விளக்குகள் எரியவில்லை என்று தெரிகிறது. பின்லாந்து எல்லைக்கு அருகே உள்ள பெத்ரசவோத்ஸ்க் நகரில் கடும் பனிப் பொழிவு நிகழ்ந்து கொண்டுள்ளது. ஓடுபாதைக்கருகில் இருந்த வீடுகள் சேதமடையவில்லை. பாதையெங்கும் எரிந்த உடல்கள் சிதறிக்கிடந்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர்.


காயமடைந்தவர்கள் நகர அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளி்க்கப்பட்டு வருவ‌தாக உருசியாவின் புலனாய்வுத்துறை கமிட்டியின் செய்தி தொடர்பாளர் விளாடிமிர் மார்க்கின் தெரிவித்தார்.


இறந்தவர்களில் டச்சு, சுவீடன், மற்றும் இரண்டு உக்ரைனியர்களும் அடங்குவர். உருசியாவின் கில்டோபிரெஸ் என்ற அணுமின் ஏற்றுமதி நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கொல்லப்பட்டனர்.


விபத்துக்கான காரனம் உடனடியாகக் கூறப்படவில்லை எனினும், சீரற்ற காலநிலையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


மூலம்

தொகு