இலங்கையின் முன்னணித் திரைப்பட நடிகர் ஜோ அபேவிக்கிரம காலமானார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, செப்டெம்பர் 23, 2011

இலங்கையின் முன்னணித் திரைப்பட நடிகர்களுள் ஒருவரான ஜோ அபேவிக்கிரம தனது 84 ஆவது வயதில் கடந்த புதன்கிழமை காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.


ஜோ அபேவிக்கிரம இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள, இரத்தினபுரி மாவட்டத்தில் லேலோபிட்டிய எனும் பின்தங்கிய கிராமமொன்றில் 1927 சூன் 22ம் திகதி பிறந்தார். 1940 களில் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்த இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். இவரது முதல் திரைப்படம் 'சரதம' 1957இல் திரையிடப்பட்டது. 60களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாக ரசிகர்களிடம் இடம்பிடித்துக் கொண்டார்.


இலங்கையில் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயர் விருதான சரசவிய விருதினை 11 தடவைகளும், சனாதிபதி விருதினை 07 தடவைகளும் பெற்றுள்ள இவர் 1999ல் 12வது சர்வதேச சிங்கப்பூர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் 'புரஹந்த கலுவர' திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதான 'சில்வர் ஸ்கிரீன்' விருதினையும் பெற்றுள்ளார்.


இவரின் இறுதிக் கிரிகைகள் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்

தொகு