இயக்குனர் பாலச்சந்தருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஏப்பிரல் 29, 2011

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. பாலச்சந்தர் இந்தியாவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகெப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


கே.பாலசந்தர்

2010-ம் ஆண்டுக்கான விருது பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. விருதுக்கு கே. பாலச்சந்தர் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. தங்கத் தாமரைப் பதக்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படவிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் கடைசியாக நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1996 ஆம் ஆண்டில் இவ்விருது வழங்கப்பட்டது.


1930-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் பாலசந்தர். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னதாக, நாடகத் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படம்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். 1965-ல், நாகேஷ் நடிப்பில் அவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமான நீர்க்குமிழி பெரும் வெற்றி பெற்றது.


கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் உள்ள இயக்குநர் பாலச்சந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.


81 வயதாகும் பாலச்சந்தர் இயக்கிய இருகோடுகள் (1969), அபூர்வராகங்கள் (1975), தண்ணீர் தண்ணீர் (1981), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய நான்கு தமிழ்ப் படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன. 1988-ல் வெளியான ருத்ரவீணா தெலுங்குப் படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்கான நர்கீஸ் தத் தேசிய விருதை வென்றது. ஒரு வீடு இரு வாசல் படம் 1991-ம் ஆண்டுக்கான தேசிய விருதை (சிறந்த சமூகப் பிரச்னைக்கான படம்) வென்றது. பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். கலைமாமணி விருதையும் அவர் பெற்றுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய சாதனைக்காக மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருதை 1987-ல் அளித்து கௌரவித்துள்ளது. பல தொலைக்காட்சி நாடகத் தொடர்களை இவர் இயக்கியிருக்கிறார்.


தாதாசாகெப் பால்கே விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கேயின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.


மூலம்

தொகு