இந்தோனேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் விசாரணை

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

திங்கள், சனவரி 11, 2010


இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கையின் இந்தோனேசியத் தூதுவராலும், இலங்கைக் கடற்படையினராலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக, அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


விசாரணையில் ஈடுபட்டவர்களுள் ஒருவர் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைச் சேர்ந்த கப்டன் கபில் என ஆஸ்திரேலிய வழக்கறிஞர் சாரதா நாதன் தெரிவித்தார்.


விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களில் ஆஸ்திரேலியாவுக்குள் படகொன்றில் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டு பிரதமர் கெவின் ரட்டின் வேண்டுகோளின்படி இந்தோனேசியக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 252 பேரில் 8 பேரும் அடங்குவர்.


இந்த 8 பேரும் தமது அகதி விண்ணப்பம் ஆஸ்திரேலிய அரசினால் பரிசீலிக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் கீழ் படகில் இருந்து தாமாகவே முகாமுக்குப் போனவர்கள். ஏனைய 244 பேரும் கடந்த மூன்றரை மாத காலமாக படகிலேயே தங்கியுள்ளனர்.


1951 ஐக்கிய நாடுகள் ஜெனீவா உடன்பாட்டின் படி தமது நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை மூன்றாவது நாடொன்று பாதுகாக்க வேண்டும். அத்துடன், அகதிகளின் சொந்த நாட்டு அதிகாரிகள் அவர்களை விசாரிக்கும் உரிமையும் கிடையாது.


ஆனாலும், இந்தோனேசியா இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


"அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அகதிகள் இப்படியான விசாரணைகளுக்குட்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்", என திருமதி நாதன் தெரிவித்தார்.


இலங்கை அதிகாரிகள் அந்த 8 அகதிகளையும் இலங்கைக்குத் திரும்புமாறு வற்புறுத்தியதாகவும், படகில் இருக்கும் ஏனையோர் கட்டாயமாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு பூசா முகாமில் விசாரிக்கப்படுவார்கள் என்று பயமுறுத்தியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். "டிசம்பர் மாத முற்பகுதியில் கப்பல் அகதி ஒருவர் தமது சுகவீனமடைந்த தாயாரைப் பராமரிப்பதற்காக இலங்கைக்குச் சென்ற வேளை அங்கு அவர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்."


"ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் இந்தக் கப்பலைத் திருப்பி இந்தோனேசியாவுக்கு அனுப்புவதற்குக் காரணமாக இருந்தால், ஆஸ்திரேலியாவே இவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்," என திருமதி நாதன் தெரிவித்தார்.

மூலம்

தொகு