இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துத் தீப்பிடித்ததில் பலர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஆகத்து 14, 2013

மும்பாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பற்றியதில் அக்கப்பலின் பணியாளர்கள் பலர் கொல்லப்பட்டனர் என இந்தியப் பாதுகாபு அமைச்சர் தெரிவித்தார்.


ஐஎன்எஸ் சிந்துரக்சக்

எத்தனை பேர் உயிரிழந்தார்கள் போன்ற விபரங்களை அமைச்சர் ஏ. கே. அந்தோனி தெரிவிக்கவில்லை. ஆனாலும், 18 மாலுமிகள் தீப்பிடித்த கப்பலில் சிக்கியிருந்தனர் என முன்னர் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


ஐஎன்எஸ் சிந்துரக்சக் என்ற இக்கப்பல் நேற்று நள்ளிரவில் தீப்பிடித்தது. தீயணைப்பாளர்கள் 4 மணி நேரம் வரை போராடித் தீயை அணைத்தனர். டீசலில் இயங்கும் இந்தக் கப்பல் பெரும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


வெடிப்பை அடுத்து பெரும்பாலான மாலுமிகள் கப்பலில் இருந்து கடலினுள் குதித்து உயிர் தப்பினர்.


உருசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி அண்மையில் 80 மில்லியன் டாலர் செலவில் உருசியாவில் மிக நவீனமயமாக்கப்பட்டு சேவைக்கு மீண்டும் விடப்பட்டிருந்தது. வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் கப்பலில் வெடிபொருட்கள் நிறைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


2010 பெப்ரவரியில் இதே கப்பல் விசாகப்பட்டணம் கடற்படைத் தளத்தில் வைத்து தீ விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தொடர்புள்ள செய்திகள்

தொகு



மூலம்

தொகு