இந்தியா முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்தது

ஞாயிறு, சூலை 26, 2009


உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் அரிஹந்த் என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதலாவது அணுஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலை, கடல் பரிசோதனைக்காக ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ளது 'அரிஹந்த்' நீர்மூழ்கிக் கப்பல், 112 மீட்டர் நீளமும் 6 ஆயிரம் டன் எடையும் கொண்டது.


அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், நிலம், வான் மற்றும் கடல் ஆகிய மூன்று மார்க்கங்களிலும் தனது அணுசக்தித் திறனை இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது.


இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய ஐந்து கப்பலைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்ற நாடுகள் வரிசையில் சேர்ந்துள்ளது.


இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை என்றும், அதே நேரத்தில் தனது நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். கடல் மார்க்கமான பாதுகாப்பு மிகுந்த அவசியமாக மாறிவரும் தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவும் அதற்கு ஏற்றபடி தனது பாதுகாப்பு தயார் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியது முக்கியம் என மன்மோகன் சிங் தெரிவித்தார்.


உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்துள்ள இந்திய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பல தடைகளைக் கடந்து, இந்தியா இந்த தொழில்நுட்பத்தைப் பெற்று சாதனை படைக்க உதவிகரமாக இருந்திருக்கிறார்கள் என்று பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.


முக்கியமாக, அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியின் மூலம் இந்த நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.


ரஷ்யாவின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவர்களின் உறுதியான ஆதரவு, இரு நாடுகளுக்கும் இடையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு வலுவாக இருப்பதை கோடிட்டுக் காட்டுவதாகத் தெரிவித்தார்.


இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அதே நேரத்தில், அவர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் கிடைப்பதற்கு அரசு உரிய ஆதரவை அளிக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

மூலம்

தொகு