நெர்ப்பா அணுவாற்றல்-நீர்மூழ்கிக் கப்பலை உருசியா இந்தியாவிடம் கையளித்தது

திங்கள், சனவரி 23, 2012

அணுவாற்றலுடன் கூடிய கே-152 நெர்ப்பா என்ற நீர்மூழ்கிக் கப்பலை உருசியா இந்தியக் கடற்படையிடம் இன்று அதிகாரபூர்வமாகக் கையளித்துள்ளதாக ரியா நோவஸ்தி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.


971 ஷூக்கா-பி (நேட்டோ ரகம்: அக்கூலா II) தாக்குதல் வகை நீர்மூழ்கிக் கப்பல்

971 ஷூக்கா-பி (நேட்டோ ரகம்: அக்கூலா II) தாக்குதல் வகை நீர்மூழ்கிக் கப்பல் 10 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் 900 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கப்பலுக்கு ஐஎன்எஸ் சக்ரா 2 எனப் பெயரிடப்படும்.


தூர கிழக்கு பிறிமோறியே பிராந்தியத்தில் இக்கையளிப்பு வைபவம் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் உருசியாவுக்கான இந்தியத் தூதர் அஜய் மல்கோத்ரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய மாலுமிகளும் உருசிய கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்டனர்.


அதிகபட்சம் 30 கடல்மைல்/மணி வேகத்தில் செல்லவல்ல இக்கப்பல் 600 மீட்டர் ஆழம் வரையில் செல்லும்.


அமெரிக்கா, உருசியா, பிரான்சு, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கும் ஆறாவது நாடாக இந்தியா இணைகிறது. உருசிய நீர்மூழ்கி ஒன்று முன்னரும் ஒன்று ஐ.என்.எஸ்.சக்ரா என்ற பெயரில் இந்தியாவிடம் இருந்தது, ஆனாலும் அது பின்னர் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டது.


2008 ஆம் ஆண்டில் நெர்ப்பா நீர்மூழ்கி சப்பான் கடலில் பயிற்சியில் இருந்த போது விபத்துக்குள்ளாகி நச்சு வாயுவை வெளியேறியதில் 20 மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.


மூலம் தொகு