ஆஸ்திரேலியப் பொதுத்தேர்தல் 2010: எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை

ஞாயிறு, ஆகத்து 22, 2010

நேற்று சனிக்கிழமை ஆத்திரேலிய நாடாளுமன்றத்திற்காக இடம்பெற்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியான நிலையில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை அடுத்து அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமையவிருப்பதாக ஏபிசி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் எனத் தெரிய மேலும் ஒரு வாரம் எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.


இடது: ஜூலியா கிலார்ட் (பிரதமர்)
வலது: டொனி அபொட், எதிர்க்கட்சித் தலைவர்

ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவையின் மொத்தம் 150 இடங்களுக்கான தேர்தல்கள் நாடெங்கும் நேற்று நடத்தப்பட்டன. ஆளும் தொழிற் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சி இரண்டுமே ஆட்சியமைப்பதற்குத் தேவையான 76 இடங்களைக் கைப்பற்றத் தவறிவிட்டன. இறுதி முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், ஆளும் தொழிற்கட்சி 72 இடங்களையும், லிபரல் கட்சி 73 இடங்களையும் கைப்பற்றும் என ஏபிசி செய்தி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. பசுமைக் கட்சி ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது. சுயேட்சையாகப் போட்டியிட்ட நால்வர் வெற்றி பெற்றுள்ளனர்.


இந்நிலையில் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சுயேட்சைகளின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். பசுமைக் கட்சியில் இருந்து வெற்றி பெற்றவர் தாம் எப்போதும் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். பிரதமர் ஜூலியா கிலார்ட் ஏற்கனவே சுயேட்சைப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்படவ்ர்களில் மூவர் மக்களாட்சிக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஆவர். மக்களாட்சிக் கட்சி லிபரல் கட்சியின் கூட்டமைப்பில் உள்ளது.


எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட் கருத்துத் தெரிவிக்கையில், “தொழிற்கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்து விட்டதும் அல்லாமல் அதன் சட்டவுரிமை நிலையையும் இழந்து விட்டது,” எனக் குறிப்பிட்டார்.


தொழிற்கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்து விட்டதும் அல்லாமல் அதன் சட்டவுரிமை நிலையையும் இழந்து விட்டது.

—டொனி அபொட், எதிர்க்கட்சித் தலைவர்

ஆத்திரேலியாவில் கடந்த 70 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது இதுவே முதல் தடவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சர்ச்சைக்குரிய தலைமைத்துவப் போட்டியில் கெவின் ரட் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தேர்தல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


பசுமைக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானது இதுவே முதற் தடவையாகும். கடந்த 106 ஆண்டுகளாக தொழிற்கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த மெல்பேர்ண் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட் எட்டு மாதங்களுக்கு முன்னரே லிபரல் கட்சியின் தலைவராக ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


14 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஆத்திரேலியாவில் வாக்களிப்பு சட்டப்படி கட்டாயம் ஆகும்.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு