ஜூலியா கிலார்ட் ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமராகத் தெரிவு

வியாழன், சூன் 24, 2010

ஆளும் தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு ஏற்பட்ட திடீர்ப் போட்டியில் பிரதமர் கெவின் ரட் தோல்வியடைந்ததை அடுத்து, துணைப் பிரதமராக இருந்த ஜூலியா கிலார்ட் கட்சித் தலைவராகவும், ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.


புதிய பிரதமர் ஜூலியா கிலார்ட்
முன்னாள் பிரதாமர் கெவின் ரட்

கெவின் ரட் தான் இப்போட்டியில் தோல்வியடைவதைத் தவிர்ப்பதற்காக அவர் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.


சிறந்ததொரு அரசு அடுத்த அக்டோபர் மாதத்தில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தோல்வியடைவதில் இருந்து தவிர்ப்பதற்காகவே தாம் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதாக கிலார்ட் தெரிவித்தார்.


இவ்வாண்டு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் ஆளும் தொழிற்கட்சி கடும் சரிவைக் கண்டிருந்தது. அண்மையில் ரட் அரசு அறிவித்திருந்த சர்ச்சைக்குரிய சுரங்க நிறுவனங்களுக்கான வரி அதிகரிப்பு கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது.


ஐக்கிய இராச்சியத்தில் தெற்கு வேல்சில் 1961 இல் பிறந்த ஜூலியா கிலார்ட் நான்காவது வயதில் தமது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தார்.

இவ்வாண்டு ஆரம்பத்தில் கெவின் ரட் ஆஸ்திரேலியாவின் கடந்த 30 ஆண்டுகளில் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டிருந்தார்.

மூலம் தொகு