2018 பொதுநலவாயப் போட்டிகளை நடத்தும் உரிமையை கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, நவம்பர் 12, 2011

2018 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமை ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்தெரிவின் மூலம் அம்பாந்தோட்டை நகரில் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்தது.


கோல்ட் கோஸ்ட் நகரம்

சென் கிட்ஸ் என்ற கரிபியன் தீவில் நேற்றிரவு இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டிகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.


குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்கே உள்ள கோல்ட் கோஸ்ட் நகருக்கு 43 வாக்குகளும் அம்பாந்தோட்டை நகருக்கு 27 வாக்குகளும் கிடைத்தன.


பொதுநலவாயப் போட்டிகளின் 80 ஆண்டு கால வரலாற்றில் ஆஸ்திரேலியா இதுவரையில் நான்கு தடவைகள் போட்டிகளை நடத்தியுள்ளது. ஆனால் இலங்கை முதற் தடவையாக தனது நகரம் ஒன்றில் நடத்துவதற்குப் போட்டியிட்டுள்ளது.


2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட அம்பாந்தோட்டை நகரரில் 2016 ஆம் ஆண்டுக்குள் புதிய விளையாட்டு அரங்கங்கள், பன்னாட்டு விமான நிலையம், மற்றும் உட்கட்டமைப்புகளை அமைக்கவிருப்பதாக இலங்கை உறுதியளித்திருந்தது.


குயின்ஸ்லாந்தின் முதல்வர் அன்னா பிளை முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது சென் கிட்ஸ் தீவில் இருந்தார். "கோல்ட் கோஸ்டிற்கும் குயின்ஸ்லாந்திற்கும், ஆஸ்திரேலியாவுக்கும் எனது வாழ்த்துகள், நாங்கள் வென்று விட்டோம்," எனக்கூறி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்.


பொதுநலவாயத்தின் அடுத்த போட்டிகள் 2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கின்றன.


மூலம்

தொகு