2012 வீவா கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கேற்கிறது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, சூன் 3, 2012

நாளை ஆரம்பமாகவிருக்கும் 5வது வீவா உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டியில் தமிழீழம் சார்பாக ஓர் அணி முதற்தடவையாகப் பங்கேற்கவுள்ளது. இந்தப் போட்டியில் பல நாடுகளிலும் இருந்து தமிழீழ விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.


2012 ஆம் ஆண்டுக்கான வீவா உலகக் கிண்ணப் போட்டிகள் ஈராக்கின் வடக்கே ஈராக்கிய குர்திஸ்தானில் சூன் 4 முதல் சூன் 9 வரை நடைபெறுகின்றன. இப்போட்டியில் தமிழீழ அணியுடன், தார்பூர், ஈராக்கிய குர்திஸ்தான், வடக்கு சைப்பிரசு, ரேடியா, ஒக்சித்தானியா, புரோவென்சு, மேற்கு சகாரா மற்றும் சான்சிபார் ஆகிய ஒன்பது அணிகள் மோதவுள்ளன. இவ்வணிகள் நெல்சன் மண்டேலா வெற்றிக்கிண்ணத்துக்காக போட்டியிடவுள்ளன.


இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இப்போட்டிகள் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்காக, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறப்படாத தேசிய இனங்களுக்காக புதிய கூட்டமைப்பு வாரியத்தினால் (Nouvelle Fédération-Board, NFB) ஒழுங்குபடுத்தப்படும் பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும்.


மூலம்

தொகு