2010 உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது
சனி, சூன் 12, 2010
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
2010 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளுக்கான ஆரம்ப வைபவம் மிகவும் கோலாகலமாக தென்னாப்பிரிக்காவின் ஜொகான்னஸ்பர்க் நகரில் உள்ள சொக்கர் சிட்டி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டம் துவங்கியது. முதல் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. இப்போட்டி 1-1 என்ற கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
சிறுவர் சிறுமியர் உட்பட நூற்றுக்கணக்கான வாத்தியக்காரர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர். தென்னாப்பிரிக்காவில் இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக நூறு கோடி டாலர்கள் கணக்கில் செலவு செய்து, கண்ணைக் கவரும் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையங்கள், பிற கட்டமைப்பு வசதிகள் கட்டப்பட்டுள்ளன.
முதற்தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இப்போட்டிகள் இடம்பெறுகின்றன. 32 நாட்டு அணிகள் பங்குபற்றும் இறுதிச் சுற்றில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெறும். இறுதிப் போட்டி ஜூலை 11 இல் நடைபெறும்.
தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவரது 13 வயது பூட்டி சென்ற வியாழன் அன்று வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததை அடுத்தே அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி ஒழிந்த அந்த நாளுக்குப் பின்னர் நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கியமான நாள் என்றால் அது இன்றைய தினம்தான்," என்று அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா நிகழ்வில் உரையாற்றும் போது கூறினார்.
"இது வெறுமனே ஒரு விளையாட்டு போட்டி மட்டும் அல்ல. உலக மக்களை ஒருவரோடொருவர் தொடர்புபடுத்துவதற்கான ஓர் வழி இது," என்று பன்னாட்டு கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் செப் பிளேட்டர் கூறினார்.
ஐநா செயலர் பான் கி மூன், அமெரிக்க உதவி அரசுத்தலைவர் ஜோ பிடென், மெக்சிக்கோ அரசுத்தலைவர் பிலிப்பே கால்டெரன் உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வுகள் 215 நாடுகளில் தொலைக்காட்சி மூலம் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.
இப்போட்டிகளுக்காக தென்னாப்பிரிக்கா 3.55 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்கிறது. 370,000 வெளிநாட்டவர்கள் இப்போட்டிகளைக் காண தென்னாப்பிரிக்காவுக்கு வருவார்கல் என எதிர்பார்க்கப்படுகிறது.
லயனல் மெசி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, வைன் ரூனி போன்ற உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் இறுதிப்போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். ஆனாலும் இங்கிலாந்தின் ரியோ பெர்டினாண்ட், டேவிட் பெக்கம், ஜெர்மனியின் மைக்கல் பலாக், கானா நாட்டின் மைக்கல் எசியென் போன்றோர் காயங்கள் காரணமாக பங்குபற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்
தொகு- World Cup 2010 begins in South Africa, பிபிசி, ஜூன் 11, 2010
- கோலாகலத் துவக்கம், பிபிசி தமிழோசை, ஜூன் 11, 2010
- உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நேற்று கோலாகலமாக ஆரம்பம், தினகரன், ஜூன் 12, 2010
- South African ecstasy as World Cup kicks off, பிபிசி, ஜூன் 11, 2010