வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவர்களிடம் மன்னிப்புக்கோர கோர்டன் பிறவுண் திட்டம்

திங்கள், நவம்பர் 16, 2009


இருபதாம் நூற்றாண்டில் தமது காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான சிறுவர்களை அனுப்பி வைத்த பிரித்தானியாவின் நடவடிக்கை தொடர்பில் மன்னிப்புக் கோருவதற்கு அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிறவுண் திட்டமிட்டிருப்பதாக பிபிசி தெரிவிக்கின்றது.


40 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த சிறுவர் குடியேற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏழைச் சிறுவர்கள் அவர்களின் நல்வாழ்வுக்காக அவுஸ்திரேலியா, கனடா போன்ற காலனித்துவ நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


கோர்டன் பிறவுண்

சிறுவர்களைத் தவறாக நடத்தியமை தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் இன்று மன்னிப்புக் கோரத் தயாராகி வரும் நிலையிலேயே இச் செய்தியும் வெளிவந்துள்ளது. சிறுவர்கள் குடியேற்ற நிகழ்ச்சித் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆலோசிக்குமாறு அதிகாரிகளை பிறவுண் கேட்டுள்ளதாகவும் இது குறித்த அறிக்கை புது வருடத்தில் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.


பெற்றோர் இறந்து விட்டதாகவும் மிகச் சிறப்பான வாழ்வு அவர்களுக்காகக் காத்திருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பிரிட்டனை விட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மூன்று வயது சிறுவர்கள் கூட அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டமையைப் பெரும்பாலான பெற்றோர்கள் தெரிந்திருக்கவில்லை. சிறுவர் பராமரிப்பு அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து இந் நடவடிக்கையில் ஈடுபட்டன.


இச் சிறுவர்களுக்குப் பண்ணை வேலை தொடர்பான கல்வி மட்டுமே வழங்கப்பட்டதுடன் இவர்கள் உடல், உள ரீதியிலும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் பல கொடுமைகளுக்கும் இலக்காகினர். இந்நிலையில் சுகாதார சபைக்கு பிறவுண் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் முன்னைய அரசாங்கங்களின் நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டிய சரியான தருணம் இதுவெனக் குறிப்பிட்டுள்ள பிறவுண், தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை செவிமடுக்க வேண்டியது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலம் தொகு