விமானத் தளத்திலிருந்து வெளியேற அமெரிக்காவுக்கு பாக்கித்தான் 15 நாள் காலக்கெடு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், நவம்பர் 28, 2011

பலுக்கித்தான் மாகாணத்தில் உள்ள விமானப் படைதளத்தில் இருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாக்கித்தான் உத்தரவிட்டுள்ளது.


நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நேட்டோ படைத் தாக்குதலைத் தொடர்ந்து பாக்கித்தான் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பிரதமர் யூசுப் ராசா கிலானி வெளியுறவு அமைச்சகத்தில் அவசர கூட்டத்தை நடத்தினார். பிரதமர் யூசுப் ராசா கிலானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாகித்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. "பாக்கித்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்," என பிரதமர் கிலானி இதை வர்ணித்துள்ளார். அத்துடன், ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பொருட்கள், ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகளை பாக்கித்தான் அடைத்து விட்டது. மேலும், பலுக்கித்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறும், அமெரிக்காவுக்கு பாகித்தான் உத்தரவிட்டுள்ளது.


நேட்டோ படை கடந்த வெள்ளிக்கிழமை எல்லை மீறி நடத்திய தாக்குதலில் 28 பாக்கித்தானியப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே பாக். அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகித்தான், அமெரிக்க உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.


இதில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆப்கானித்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகளுக்கு பாகித்தானின் கோர்க்காம், சாமன் ஆகிய எல்லைப் பகுதிகள் வழியாகத் தான் லொறிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் வீரர்களுக்கான உணவு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே, அந்த பாதைகளை அடைத்து விடுவது என முடிவு செய்யப்பட்டது. அவை ஜம்ரூட் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.


இதேபோன்று பாகித்தான் வட மேற்கு பகுதியில் ஆப்கானித்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பாகித்தானுடன் இணைந்து அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவு கணைகளை வீசி அழிந்து வருகிறது. அதற்காக ஷாம்ஸி விமானப் படைத்தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் அமெரிக்க இராணுவம் மேற்படி தளத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனிடையே இந்த சம்பவத்திற்கு பாக். அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு கண்டன கடிதத்தை அனுப்பியுள்ளது. அத்துடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவருக்கு, பிரதமர் கிலாலியை உடனடியாக சந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகித்தான் பிரமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் பாகித்தான் அரசு அமெரிக்கா, நேட்டோ படை மற்றும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகளுடனான உறவு குறித்து மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.


இதேவேளை இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒபாமா அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகித்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், பாதிக்கப்பட்டுள்ள இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியை இந்த தாக்குதல் பயனற்றதாக்கி உள்ளதாக தெரிவித்தார். தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியானது வருத்தமளிப்பதாகவும், இதுதொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் ஹில்லரி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு