விமல் வீரவன்ச தனது உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார்

ஞாயிறு, சூலை 11, 2010


மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் நிபுணர் குழுவைக் கலைக்கக் கோரி இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச ஆரம்பித்த காலவரையறையற்ற உண்ணாநோன்பை மூன்றாவது நாளான நேற்று கைவிட்டுள்ளார்.


அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச வீரவன்சவுக்கு தண்ணீர் அருந்தக் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். மகிந்த வருவதற்கு சில நிமிடங்கள் முன்பதாக பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வீரவன்சவைச் சந்தித்து உரையாடியிருந்தார்.


இராசதந்திர ரீதியில் பலனளிக்காத, வெறும் விளம்பரத்தை தேடிக்கொள்ளும் நடவடிக்கையாகவே அமைச்சரின் இந்த போராட்டம் பலராலும் பார்க்கப்படுகிறது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


தமது படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மிகக்கடுமையாகவே மறுக்கும் அரசாங்கம் கடந்த கால யுத்தத்திலிருந்து பெற்ற படிப்பினைகளை ஆராயும் விதத்தில் தனது சொந்த நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளதாக கூறுகிறது.


உருசியா உட்பட இலங்கை அரசாங்கத்தின் நட்பு நாடுகள் சில இந்த போக்கை ஆதரிக்கின்றன.


ஐ.நா.மன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்பாட்டங்கள் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இலங்கையில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தன. ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ரொமானியா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசுத்தலைவரிடம் பின்வரும் நான்கு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தே போராட்டம் கைவிடப்பட்டதாக விமல் வீரவன்சவின் ஐக்கிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது:

  1. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணவர்கள் குழு எந்த காரணத்தை கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
  2. அந்த குழு தொடர்பில் விசாரணை நடத்த இலங்கையில் உள்ளநாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.
  3. எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு குழுவை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது.
  4. ஐக்கிய நாடுகள் சபையுடன் பேசி, நிபுணர்கள் குழுவை நீக்க வேண்டும்.


இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே விமல் வீரவன்சவுக்கு மகிந்த நீரைப்பருக்கி உண்ணாநிலை போராட்டத்தை முடித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு