கொழும்பு ஐநா அலுவலகம் முன்னால் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம்
புதன், சூலை 7, 2010
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
சென்ற ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தனது விசாரணைகளை ஐநா நிறுத்திவிட வேண்டும் என்று கோரி கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் முன்னால் இன்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.
அலுவலகப் பணியாளர்கள் தமது வீட்டில் இருந்தே அன்றாடப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஐநா அலுவலகம் பணித்துள்ளது. சில முக்கிய அதிகாரிகள் மட்டும் அலுவலகத்தில் தங்கியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ஐக்கிய நாடுகள் உதவி நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று புதன்கிழ்மை அன்று அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின. ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதோடு, பான் கி மூனின் கொடும்பாவியையும் எரித்தனர்.
"பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை," என வீரவன்ச தெரிவித்தார்.
"இன்று எமக்கு ஒரு மறுமொழி வேண்டும். இல்லையேல் நாளை முதல் எமது பிரதிநிதி ஒருவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்குவார்."
போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்ததை இலங்கை அரசு மறுத்திருக்கிறது. ஆனாலும் சில நாடுகள் மற்றும் அமைப்புகள் தம்மிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளன.
"இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது," என ஐநாவின் பேச்சாளரான பர்ஹான் ஹக் நேற்றிரவு பிபிசிக்குத் தெரிவித்தார்.
"ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களின் உரிமையை தாம் மதிக்கின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கு எதிராக அதன் நிபுணர்கள் குழுவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது," என அமெரிக்காவின் அரசத் திணைக்களத்தின் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்ததாக ஏஎப்பி செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் வெளியில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்தகவலை இலங்கை அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக பான் கீ மூனினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை கலைக்கும் வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மூலம்
தொகு- Sri Lanka protest outside UN office continues, பிபிசி, ஜூலை 7, 2010
- Sri Lankans protest over UN inquiry, அல்ஜசீரா, ஜூலை 6, 2010