விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச் பிணையில் விடுதலை

வெள்ளி, திசம்பர் 17, 2010

செய்திக்கசிவு இணையத்தள விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசான்ச் லண்டனின் சிறையில் ஒன்பது நாட்கள் கழித்த பின்னர் நேற்று வியாழன் மாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


யூலியன் அசான்ச்

அசான்ச் 200,000 பவுண்டு (312,000 டாலர்) ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, குறிப்பிட்ட பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும், கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், தினமும் உள்ளூர்க் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகள் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவருடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க அவரது உடலில் மின்னணு கருவி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.


அவரது பிணையை எதிர்த்து சுவீடன் அரசு தொடர்ந்த மேல் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. சுவீடனில் தொடரப்பட்ட பாலியல் வழக்குத் தொடர்பாக லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


அசான்சின் பிணைக்கான ரொக்கப் பணத்தை அவரது ஆதரவாளர்களே திரட்டிக் கொடுத்திருந்தனர். இவர்களில் பலர் பிரபலங்கள் ஆவர்.


இதற்கிடையில், இராசதந்திர ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸ் நிறுவனமோ அல்லது யூலியன் அசான்சோ தமது நாட்டுச் சட்டத்தில் எவ்வித தவறும் செய்யவில்லை என ஆத்திரேலியக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


மூலம் தொகு