பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்

This is the stable version, checked on 19 சனவரி 2011. Template changes await review.

வெள்ளி, சனவரி 14, 2011

"கட்டற்ற கலைக்களஞ்சியம், எவரும் தொகுக்கலாம்", என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், விக்கிப்பீடியா தொகுப்பதற்கு பெரும்பாலானோருக்கு சிரமம் மிகுந்ததாகவே உள்ளது என அதன் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்துள்ளார்.


விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்

விக்கிப்பீடியா இணையத்தளம் புதிய தலைமுறையை வேண்டி நிற்கிறது, பெருமளவு பெண்கள் பங்களிக்க வேண்டும், என பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்தார்.


உலகின் 5வது பிரபலமான இணையத்தளமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் சனவரி 15 ஆம் நாள் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. "அதன் பயனர்களின் எண்ணிக்கையை 400 மில்லியனில் இருந்து 2015 ஆண்டுக்குள் 1 பில்லியனாக அதிகரிப்பதற்குக் குறிக்கோள் வைத்திருக்கிறோம். ஆனால் இவ்வளர்ச்சிக்கு புதிய இடைமுகப்பு அவசியமாகிறது," என திரு. வேல்ஸ் தெரிவித்தார்.


"எமது பழைய பயனர்களை நாம் ஆதரிக்க வேண்டும், ஏனெனில் அவர்களே எமது வலைத்தளத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவர்கள், ஆனால் புதிய பயனர்களுக்கும் நாம் ஓர் ஏணி தயாரிக்க வேண்டும்," என்று கூறிய அவர், "பலர் எமது தளத்தில் பங்களிப்பதற்குப் "பயப்படுகிறார்கள்". எமது நிரற்தொடர்கள் பல அவர்களுக்கு சிக்கலானதாக உள்ளது," என்றார். “அவர்கள் நல்லவர்கள், ஏனென்றால் எதனையும் அவர்கள் "உடைக்க" விரும்பவில்லை.”


தற்போது, பயனர்களிடம் இருந்து பெறும் நிதியைக் கொண்டு விக்கிப்பீடியா நிறுவனம் இலாப நோக்கமல்லாமல் இயங்குகிறது. இத்திட்டத்தை நாம் மாற்ற விரும்பவில்லை. இவ்வாண்டு நாம் 16 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பயனர்களிடம் இருந்து நன்கொடையாகப் பெற்றுள்ளோம்.


விக்கிலீக்ஸ் என்ற செய்திக்கசிவு இணையத்தளத்துடனான உறவு பற்றியும் ஜிம்மி வேல்ஸ் தனது நேர்காணலில் தெளிவுபடுத்தினார். "அவர்களின் வேலை விக்கி அல்ல. விக்கி என்பது கூட்டமைப்பு மூலம் தொகுத்தல், சிலர் இணைந்து எதனையாவது எழுதுதல். ஆனால் விக்கிலீக்ஸ் செய்வது ஆவணங்களைப் பெற்று அதனை வெளியிடுவது மட்டுமே."


ஆனாலும், இவ்விரண்டு நிறுவனங்களும் ஓரளவு மென்மையான இணைப்பைக் கொண்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக, விக்கிலீக்ஸ்.நெட், விக்கிலீக்ஸ்.கொம், விக்கிலீக்ஸ்.யூஎஸ் ஆகிய இணையத்தளங்களின் களப்பெயர்களின் உரிமை எமது விக்கியா நிறுவனத்திடமே உள்ளது. இவற்றை நாம் அவர்களுக்கு மாற்றி விட்டோம், ஆனாலும் அந்த மாற்றத்தை அவர்கள் தொழிநுட்பரீதியாக இன்னும் செயற்படுத்தவில்லை என்றர் வேல்ஸ். “அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் கையெழுத்திட வேண்டியது மட்டுமே." ஆனால் அவர்களுக்கு இப்போது அதற்கு நேரமில்லை.


"இவ்வாரத்தில் இக்களப்பெயர்கள் காலாவதியாகின்றன. நான் இவற்றைப் புதிப்பிக்கப் போவதில்லை," என்றார் திரு. வேல்ஸ்.


மூலம்