விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது

ஞாயிறு, ஆகத்து 22, 2010


விக்கிகசிவுகளின் (Wikileaks) நிறுவனரும் அதன் பிரதம ஆசிரியருமான ஜூலியன் அசான்ச் என்பவரை பாலியல் வன்முறைக் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த பிடியாணையை சுவீடன் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது.


விக்கிகசிவுகள் நிறுவனர் ஜூலியன் அசான்ச்

பாலியல் வன்முறையில் அசான்ச் ஈடுபடவில்லை என தலைமை வழக்குத் தொடுநர் முடிவு செய்திருப்பதாக சுவீடனின் குற்றவியல் ஆணைய இணையத்தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும் இது குறித்து விபரங்கள் எதனையும் அது வெளியிடவில்லை.


வெள்ளிக்கிழமை இரவு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.


ஆப்பானித்தான் போர் குறித்த பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அண்மையில் வெளியிட்டிருந்த விக்கிகசிவுகள் இணையத்தளம், அசான்ச் மீதான குற்றங்கள் ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது.


39 வயதுடைய ஆஸ்திரேலியரான ஜூலியன் அசான்ச் தற்போது எங்குள்ளார் எனத் தெரியவில்லை என பிபிசி குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக, அசான்ச் ஒரு பெண்ணை வன்புணவு செய்ததாகவும் வேறொரு பெண்ணை பாலியல் துன்பத்திற்குள்ளாக்கியதாகவும் அவர் மீது சுவீடனின் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது அவர் மீது வழக்குகள் திரும்பப் பெற்றுக் கொண்டாலும் பாலியல் துன்பத்திற்கெதிராகத் தொடர்ந்து விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


விக்கிலீக்ஸ் ஆப்கானித்தான் தொடர்பான மேலும் 15,000 ஆவணங்களை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடப்போவதாக ஜூலிய அசான்ச் சென்ற வாரம் அறிவித்திருந்தார்.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு