வாகன விபத்தில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் நூரானியா ஹசன் உயிரிழந்தார்

வியாழன், ஏப்பிரல் 19, 2012

இலங்கையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நூரானியா ஹசன் கொல்லப்பட்டார். இலங்கை வானொலியைச் சேர்ந்த மேலும் பலர் படுகாயமடைந்தனர்.


யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்கள் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே அவர்கள் சென்ற வாகனம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அநுராதபுரம் ரம்பாவை-மிகிந்தலை பகுதியில் பாரவுந்து ஒன்றுடன் மோதியது.


இவ்விபத்தில் ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் அந்த இடத்திலேயே இறந்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டாளர் ஆர். யோகராஜன், அறிவிப்பாளர்கள் ஏ.எல். ஜபீர், ஜெகன் மோகன், சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த சந்தன, உப்பாலி யாப்பா ஆகியோருடன் யோகராஜனின் மனைவி சாந்தினி, மகன் பவித்திரன் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள இறம்பாவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.


நூரானியா ஹசன் (பௌசுல் ஹசன்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளரும் தற்போது அதன் சந்தைப்படுத்தல் முகாமையாளரும், மூத்த ஒலிபரப்பாளரும் ஆவார். முஸ்லிம் சேவைப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர்.


இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


மூலம் தொகு