லிட்டில் இந்தியா கலவரத்தில் ஈடுபட்ட 53 பேரை சிங்கப்பூர் நாடுகடத்துகிறது
புதன், திசம்பர் 18, 2013
- 16 திசம்பர் 2015: பிஎசுஎல்வி ஏவுகலம் சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களை ஏவியது
- 23 மார்ச்சு 2015: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்
- 18 திசம்பர் 2013: லிட்டில் இந்தியா கலவரத்தில் ஈடுபட்ட 53 பேரை சிங்கப்பூர் நாடுகடத்துகிறது
- 9 திசம்பர் 2013: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம், ஒருவர் உயிரிழப்பு
- 20 சூன் 2013: இந்தோனேசியக் காட்டுத்தீ: சிங்கப்பூர் புகை மூட்டத்தில் மூழ்கியது
இரு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் இடம்பெற்ற கலவரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 53 வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றவிருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. கலவரங்களில் ஈடுபட்ட மேலும் 28 பேருக்கு எதிராக வழ்க்குத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இம்மாதம் எட்டாம் நாள் லிட்டில் இந்தியா பகுதியில் இந்தியத் தொழிலாளி ஒருவர் பேருந்து ஒன்றினால் மோதுண்டு இறந்ததை அடுத்து அங்கு கலவரம் வெடித்தது. காவல்துறையினர் உட்படப் பலர் காயமடைந்தனர், வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டன.
நாடு கடத்தப்படவிருப்போரில் 52 பேர் இந்தியர்கள் என்றும், ஒருவர் வங்காளதேசத்தவர் என்றும் காவல்துறை ஆணையர் இங் ஜூ ஹீ கூறினார்.
இக்கலவரம் தொடர்பிலான காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகள் பெருமளவு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டுக் குற்றம் சாட்டப்பட்ட 35 இந்தியர்களில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 28 பேர் மீதான விசாரணைகள் தொடருகின்றன. ஏனைய 53 பேரும் நேற்றுக் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனைகளில் பிடிபட்டனர்.
சட்டத்தைப் பின்பற்றுபவர்கள் கவலைப்படத் தேவையில்லை, அதே வேளையில், தவறிழைப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என துணைப் பிரதமர் டியோ சீ இயன் செயுதியாளர்களிடம் கூறினார்.
விசாரணை எதுவுமின்றித் தன்னிச்சையான நாடுகடத்தல் பெரும் கவலையைத் தருகிறது என சிங்கப்பூர் வர்க்ஃபெயர் என்ற தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்
தொகு- Singapore to deport 53 foreign workers over riot, பிபிசி, டிசம்பர் 18, 2013
- Singapore Riot: 52 Indians to Be Deported, 28 Charged, அவுட்லுக் இந்தியா, டிசம்பர் 17, 2013