சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம், ஒருவர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், திசம்பர் 9, 2013

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு மூண்ட கலவரத்தில் காவல்துறையினர் உட்பட 18 பேர் காயமடைந்தனர். 27 தெற்காசிய நாட்டவரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில மணி நேரத்தில் கல­வ­ரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினரின் அறிக்கை தெரி­வித்தது.


ரேஸ் கோர்ஸ் சாலை, ஹேம்­ச­யர் சாலை சந்­திப்­பில் நேற்­றி­ரவு கிட்­டத்­தட்ட 9.23 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று 33 வயதான இந்தியர் ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து நானூறுக்கும் அதிகமானோர் அங்கு கூடி கலவரத்தில் ஈடுபட்டனர். மூன்று காவல்துறை வாக­னங்கள், குடிமைத் தற்­காப்பு ஆம்­பு­லன்ஸ் வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகிய ஐந்து வாக­னங்கள் எரிக்­கப்­பட்­டன. சம்ப­வத்­தில் குடிமைத் தற்­காப்­புப் படையைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது வாக­னங்கள் சேதம் அடைந்த­தாக குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. தனியார் வாகனங்களும் சேதம் அடைந்தன.


காயமடைந்தவர்களில் 10 பேர் காவல்துறையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் சிங்கப்பூர் கண்ட முதலாவது கலவரம் இதுவாகும் என காவல்துறை ஆணையர் இங் ஜூ ஹீ கூறினார். இவ்வகையான கலவரம் சிங்கப்பூருக்கு உகந்ததல்ல என அவர் வர்ணித்தார்.


லிட்டில் இந்தியா அல்லது குட்டி இந்தியா என்றழைக்கப்படும் பகுதியில் பொதுவாக இந்திய, வங்காளதேச நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று கூடுவர். இவர்களுக்காகவே பல மதுபானக் கடைகள் அண்மைய காலத்தில் இப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளன. இவர்கள் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.


சாலை விபத்து பற்றித் தகவல் அறிந்த­தும் அங்கு விரைந்த தற்­காப்­புப் படை­யி­னர் பேருந்தில் அகப்பட்ட நபர் இறந்து விட்­ட­தா­கத் தெரிவித்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை தெரிவித்தது. பேருந்­துக்கு அடியில் மாட்­டிக் ­கொண்­டி­ருந்த அந்நபரின் உடலை மீட்ட ஊழியர்கள் மீது கலகக்காரர்கள் பொருட்களையும் கற்களையும் வீசித் தாக்­கு­தல் நடத்­தி­னர். அங்கிருந்த வாக­னங்களைச் சேதப்படுத்­தி­யும் அதி­கா­ரி­களைக் காயப்­படுத்­தி­யும் கல­வ­ரத்­தில் ஈடு­பட்டனர். குடிமைத் பாது­காப்­புப் படையினரின் ஒன்பது வாக­னங்கள் சேதம் அடைந்த­ன. இவற்றில் ஐந்து வாகனங்கள் தீமூட்டி எரிக்கப்பட்டன.


சிங்கப்பூரில் கலவரங்களில் ஈடுபடுவோருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும் கசையடியும் வழங்கப்படுகின்றது.


"இது ஒரு கடுமை­யான சம்ப­வம். இதில் பல­ருக்­குக் காயம் ஏற்­பட்­ட­து­டன் பொதுச் சொத்துகளும் சேதப்­படுத்­தப்­பட்­டுள்­ளன. இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் அனைத்து முயற்­சி­களை­யும் மேற்­கொள்­வர்,” என்று துணைப் பிர­த­ம­ரும் உட்துறை அமைச்சருமான டியோ சீ ஹியன் தெரி­வித்­தார்.


"கலவரம் வெடிக்க எக்காரணம் இருந்தாலும், இவ்வகையான வன்முறைகள் மன்னிக்க முடியாதவை," என பிரதமர் லீ ஹிசியென் லூங் கூறினார்.


மூலம்

தொகு