லண்டனில் தமிழ்ச் சிறுமி சுடப்பட்டு ஆபத்தான கட்டத்தில்

வியாழன், மார்ச்சு 31, 2011

லண்டனில் நேற்றிரவு போதைக் குழுவைச் சேர்ந்தவர்களினால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இலங்கையைச் சேர்ந்த 5 அகவையுடைய சிறுமியும், 35 அகவைத் தமிழ் நபரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஐக்கிய இராச்சியத்தில் லண்டனின் தென் பகுதியிலுள்ள ஸ்டொக்வெல் என்ற இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போதைக் கோஷ்டி ஒன்று வேறொரு நபரைத் துரத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்ட தமிழ்க் கடை ஒன்றினுள் தற்பாதுகாப்புக்காக நுழைந்ததாகவும் துரத்தி வந்தவர்கள் அவர் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் கடையில் நின்றிருந்த 5 வயதுச் சிறுமியும் கடை உரிமையாளரும் படுகாயமுற்றனர்.


சிறுமியின் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு ஏறியதாகவும் மற்றவரின் முகத்தில் சூடு பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையைக் கடந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் கறுப்பினத்தவர்கள் என்றும் 14 முதல் 17 அகவைக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அனைவரும் தப்பி ஓடிவிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மூலம் தொகு