யாழ்ப்பாணத்துப் புலவர், பத்திரிகையாளர் ம. பார்வதிநாதசிவம் காலமானார்

புதன், மார்ச்சு 6, 2013

ஈழத்துப் புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞருமான பார்வதிநாதசிவம் அவர்கள் தமது 77வது அகவையில் கொக்குவிலில் உள்ள தமது இல்லத்தில் நேற்றுக் காலமானார் என தமிழ்நெட் அறிவித்துள்ளது. இவர் புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாகப் பாதிப்புற்றிருந்தார்.


1936 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்த பார்வதிநாதசிவம் பெரும்புலவர் ம. க. வேற்பிள்ளையின் பெயரரும், ம. வே. மகாலிங்கசிவத்தின் மகனும் ஆவார். தந்தை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பெரிய தகப்பனார் ம. வே. திருஞானசம்பந்தப் பிள்ளை இந்துசாதனம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். பல புதின நூல்களை எழுதியவர்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பார்வதிநாதசிவம் கல்வி கற்றார். அப்போது அவர் பாவேந்தர் பாரதிதாசனை அடிக்கடி சென்று சந்திப்பார். தனது கவிதைகள் எளிமையாக அமைய இவரே காரணம் என்பார் புலவர் பார்வதிநாதசிவம்.


சுதந்திரன் பத்திரிகையில் தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த பார்வதிநாதசிவம் அவர்கள், பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு நாளிதழின் ஞாயிறு இதழுக்கு ஆசிரியராக 1970-1980களிலும், உதயன் பத்திரிகையில் 1990களிலும் பணியாற்றினார். அத்துடன் முரசொலி, சஞ்சீவி, தினக்குரல் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது கட்டுரைகளின் தொகுப்பு தமிழ்ச்செல்வம் என்ற பெயரில் வெளிவந்தது. 'கலைக்கண்' என்ற பெயரில் இதழ் ஒன்றை 1970களில் வெளியிட்டு வந்தார்.


புலவரின் இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை அன்னாரின் கொக்குவில் இல்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கனடாவில் வசிக்கும் பாரதி என்ற மகளும் யாழ்ப்பாணத்தில் வதியும் மகாலிங்கசிவம், இளங்கோ, பாலமுரளி என மூன்று மகன்மாரும் உள்ளனர்.


மூலம்

தொகு