மைக்கல் ஜாக்சனின் இறப்புக்கு அவரது மருத்துவரே காரணம், நீதிமன்றம் தீர்ப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், நவம்பர் 8, 2011

பிரபல பாடகரான மைக்கல் ஜாக்சனின் இறப்பிற்கு அவரது மருத்துவர் கொன்ராட் மறீ என்பவரே காரணம் என லாஸ் ஏஞ்சலசின் நீதிமன்றத்தில் நடுவர்கள் தீர்ப்புக் கூறினர். 12 பேரைக் கொண்ட நடுவர்கள் கடந்த இரண்டு நட்களாகக் கலந்துரையாடிய பின்னர் இம்முடிவுக்கு வந்துள்ளனர்.


மைக்கேல் ஜாக்சன் (2010)

மைக்கல் ஜாக்சன் 2009 ஆம் ஆண்டு சூன் 25 இல் அளவு கூடிய ஆற்றல் வாய்ந்த மயக்க மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்தார். 58 வயதான மருத்துவர் மறீ நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அநுபவிக்க நேரிடும் என்றும் அவரது வைத்தியராகப் பணியாற்றும் உரிமமும் இரத்துச் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்துக்கு வெளியே குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நீதிமன்றத்தினுள் அமர்ந்திருந்த ஜாக்சனின் குடும்பத்தினர் அமைதியாக அழுததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


மருத்துவர் மறீக்கான தண்டனை நவம்பர் 29 ஆம் நாள் வழங்கப்படும். அதுவரையில் அவருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது எனவும் தடுப்புக் காவலிலேயே வைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மைக்கல் ஜாக்சன் மருத்துவரை ஆலோசியாமல் அளவுக்கதிகமாக மயக்க மருந்தை உட்கொண்டார் என மருத்துவரின் வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆறு வாரங்கள் நடந்த இந்த வழக்கில் 49 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். 300 இற்கும் அதிகமான அத்தாட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.


மூலம்

தொகு