மே 5 இல் மலேசியப் பொதுத் தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதன், ஏப்பிரல் 10, 2013
- மலேசியப் பொதுத் தேர்தல் 2013: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது
- மலேசியத் தேர்தல் 2013: இரு பெரும் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி
- மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- மே 5 இல் மலேசியப் பொதுத் தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- மலேசிய நாடாளுமன்றத்தை பிரதமர் நஜீப் ரசாக் கலைத்தார், விரைவில் தேர்தல்
மலேசியாவின் நாடாளுமன்றத் தேர்தலும் பொதுத்தேர்தலும் மே 5 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தல் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஒரு பெரும் சவால் நிறைந்த தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரபூர்வமான தேர்தல் பிரச்சாரங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும். பிரதமர் நஜீப் கடந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு வழி வகுத்தார். கடந்த சனிக்கிழமை அன்று நஜீப் தனது புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தை அறிவித்திருந்தார். தாம் வெற்றி பெறும் பட்சத்தில் ஏழைகளுக்கு ஊக்கப் பணம், மற்றும் வாழ்க்கைச் செலவுக் குறைப்பு போன்ற திட்டங்களை அறிவித்தார்.
மலேசியா விடுதலை பெற்ற நாளில் இருந்து கடந்த 56 ஆண்டுகளாக ஆளும் கூட்டணிக் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆனாலும், ஆட்சியில் நிலவும் ஊழலை அகற்றக் கோரும் எதிர்க் கட்சிகளின் பலம் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். 2008 தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முதற்தடவையாக இழந்தது.
இதுவரை நடைபெற்ற கருத்துக் கணிப்புகளின் படி தேசிய முன்னணி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது. எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசிய அரசியலில் தற்போது ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறார்.
மூலம்
தொகு- Malaysian general elections set for 5 May, பிபிசி, ஏப்ரல் 10, 2013
- GE13: Polls on May 5, EC announces, ஸ்ட்ரெயிட் டைம்சு, ஏப்ரல் 10, 2013