மலேசியத் தேர்தல் 2013: இரு பெரும் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி

சனி, மே 4, 2013

மலேசியாவில் பொதுத்தேர்தல்கள் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், பெருமளவான வாக்காளர்கள் எக்கட்சிக்கு வாக்களிப்பது என்பதை இதுவரையில் தீர்மானிக்கவில்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.


மெர்தெக்கா மையத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, மொத்தமுள்ள 222 இடங்களில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி குறைந்தது 89 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது. அதே வேளையில் பிரதமர் நஜீப் தலைமையிலான ஆளும் கூட்டணி குறைந்தது 85 இடங்களைக் கைப்பற்றும். அரசு அமைப்பதற்குக் குறைந்தது 112 இடங்கள் தேவையாகும்.


"கருத்துக்கணிப்பின் படி, எக்கட்சியும் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றுவது சாத்தியமல்ல. தீர்மானிக்கப்படாத இடங்களை யார் கைப்பற்றுவாரோ அவரே அரசாங்கத்தை அமைப்பார்," என மெர்தெக்கா மையத்தின் பணிப்பாளர் இப்ராகிம் சுபியான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 42 விழுக்காட்டினர் எதிர்க்கட்சிக்கு ஆட்சியமைக்கச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர். அதேவேளையில், 41 விழுக்காட்டினர் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியே ஆட்சியில் தொடர்ந்திருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். 4 விழுக்காட்டினர் பதிலளிக்கவில்லை. 13 விழுக்காட்டினர் தெரியாது என்று பதிலளித்தனர். ஏப்ரல் 28லிருந்து நேற்று முன்தினம் வரை 1,600 வாக்காளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 59% மலாய்க்காரர்கள், 32% சீனர்கள், 9% இந்தியர்கள். ஆய்வில் பங்கெடுத்த இந்தியர்களில் 31 விழுக்காட்டினர் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.


2008 தேர்தலில் தேசிய ரீதியாக 47 விழுக்காட்டினர் பாக்காத்தான் என்ற எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வாக்களித்தனர், ஆனாலும் அக்கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு இடங்களையே கைப்பற்ற முடிந்தது.


இனம், மற்றும் மதம் ஆகியன இத்தேர்தலில் முக்கிய பங்காற்றும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


இதற்கிடையில், போட்டி கடுமையாகவுள்ள தொகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு சேர்க்க சிறப்பு விமானப் பயணங்களுக்கு பிரதமர் நஜீப் ஏற்பாடு செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கட்சி ஆதரவாளர்கள் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்துத்தான் இந்த விமானப் பயணங்களுக்கு கட்டணம் செலுத்தினார்கள் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.


மூலம் தொகு