மெல்பேர்ணில் இந்தியச் சிறுவன் கொலை தொடர்பாக இந்திய நபர் கைது

ஞாயிறு, மார்ச்சு 7, 2010

சென்ற வியாழக்கிழமை மெல்பேர்ண் நகரில் வைத்துக் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 3 வயது இந்தியச் சிறுவனின் கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


டிலான் கேர்ஸ்வாக் என்ற அந்த இந்திய நபர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென் கில்டா காவல் நிலையத்தில் இந்நபர் மீது குற்றம் பதியப்பட்டுள்ளது. இந்நபர் பிணையில் செல்லுவதற்கு விண்ணப்பிக்கவில்லை.


இந்நபர் கொலை செய்யப்பட்ட குர்சன் சிங் என்ற சிறுவனுக்கு உறவினன் இல்லை என்றாலும், அச்சிறுவன் வசித்து வந்த வீட்டிலேயே இந்நபரும் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.


அந்தக் கொலையாளி குர்சன் சிங் என்ற அந்தச் சிறுவனை மயங்கிய நிலையில் தனது மோட்டார் வாகனத்தின் பின்புறம் உள்ள பொதிகள் வைக்கும் இடத்தில் வைத்துப் பூட்டி எடுத்துச் சென்றிருக்கிறான். பின்னர் அக்குழந்தையை 20 கிமீ தூரத்திலுள்ள தெருவோரம் வீசி விட்டுச் சென்றிருக்கிறான். குழந்தை எப்போது இறந்ததென்பது இன்னும் அறியப்படவில்லை.


குற்றவாளி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.

தொடர்புள்ள செய்தி தொகு

மூலம் தொகு