ஆஸ்திரேலியாவில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்தப்பட்டுக் கொலை

வெள்ளி, மார்ச்சு 5, 2010

விக்டோரியா மாநிலத்தில் 3 வயது இந்தியச் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆத்திரேலியக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மெல்பேர்ண் நகரத்தின் அமைவிடம்

மெல்பேர்ணில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவனின் உடல் குர்ஷன் சிங் என்ற 3 வயது இந்தியக் குழந்தையது என காவல்துறையினர் நம்புகின்றனர்.


இக்குழந்தை காணமல் போனதாக ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த குழந்தையின் பெற்றோரினால் முறையிடப்பட்டிருந்தது. சிறுவனின் தாயார் மெல்பேர்ணில் கல்வி பயிலுகின்றார்.


கடந்த காலங்களில் இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வன்முறைகள் பல நிகழ்ந்துள்ளதால், பொதுமக்கள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவும் ஒரு இனவெறிப் படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்திருப்பதால் இந்தியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பு நிலவுகிறது.


எப்படி இந்த சிறுவன் கொல்லப்பட்டான் என்பது குறித்த தடயவியல் அறிக்கைக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


"நாம் இக்கொலை தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். விரைவில் இக்கொலைக்கான காரணங்களைக் கண்டுபிடித்து விடுவோம்" என உதவிக் காவல்துறை அதிகாரி சேர் கென் ஜோன்ஸ் தெரிவித்தார்.


வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விடுமுறையைக் கழிக்கவென இங்கு வந்திருந்த போது, மெல்பேர்ணின் வடக்கில் உள்ள லாலோர் என்ற இடத்தில் அவனது வீட்டில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை திடீரெனக் காணாமல் போனான். 6 மணி நேரத்தின் பின்னர் 20 கிமீ தொலைவில் உள்ள வீதியொன்றின் ஓரத்தில் அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


"கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், கண்டுபிடிக்கப்பட்ட உடல் காணாமல் போன குர்சனினது தான்," என கென் ஜோன்ஸ் தெரிவித்தார்.


"இக்கொலை தமக்கு மிகவும் கவலை அளித்துள்ளது" என விக்டோரிய மாநில முதலமைச்சர் ஜோன் பிரம்பி தெரிவித்துள்ளார்.


"இது ஒரு கொலைச் சம்பவமாக இருந்தால், இக்குழந்தையின் கொலை ஒரு பயங்கர நிகழ்வு," என ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் தெரிவித்தார்.


கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து இந்தியாவுடனான முறுகல் நிலையைத் தணிக்கவென ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிமித் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்