முதல் தடவையாக பழங்குடி இனத்தவர் ஒருவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவு

திங்கள், ஆகத்து 30, 2010


ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே முதற் தடவையாக அதன் நாடாளுமன்றத்திற்கு பழங்குடி இனத்தவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேற்கு ஆஸ்திரேலியாவின் ஹாஸ்லுக் என்னும் தேர்தல் தொகுதியில் 57 வயதான கென் வயாட் என்பவர் இம்மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தாராளவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தொழிற் கட்சி வேட்பாளரை அவர் தோற்கடித்தார்.


இவ்வெற்றிக்குப் பின்னர் அவருக்கு இனவெறியைத் தூண்டும் கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றை அவர் நிராகரித்தார். தாம் ஒரு பழங்குடியினர் என்று தெரியாததால் தான் வாக்களித்ததாக பலர் தமக்குக் கடிதம் எழுதியுள்ளதாக வயாட் தெரிவித்தார். "எனது வாழ்க்கை முழுவதும் நான் பழங்குடியினனாகவே வாழ்ந்து வந்துள்ளேன். 60களில், 70களில், 80களில்,” என அவர் கூறினார்.


"நாம் முன்னோக்கிச் செல்வோம் - ஆஸ்திரேலியாவை நாம் முன்னோக்கி நகர்த்துவோம். ஹாஸ்லுக் ஏன் ஒரு பழங்குடியினரைத் தேர்ந்தெடுத்தது என்பதை இன்னும் ஐம்பதாண்டுகளில் வரலாற்றாளர்களும் மக்களும் ஆராய்வார்கள். நான் ஒரு பழங்குடி என்பதால் மட்டும் என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அவர்கள் அப்போது கண்டு பிடிப்பார்கள்," என கென் வயாட் செய்தியாளர்களிடம் நேற்றுத் தெரிவித்தார்.


ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாததால் அங்கு இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது. மொத்தம் 150 இடங்களில் எதிர்க்கட்சியான தாராளவாதக் கட்சி (லிபரல்) 73 இடங்களையும், ஆளும் தொழிற் கட்சி 72 இடங்களையும் பெற்றிருக்கின்றன. சுயேட்சை வேட்பாளர்கள் நால்வரும், பசுமைக் கட்சியின் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அரசு அமைப்பதற்கு 76 இடங்கள் தேவைப்படுகின்றன.


இரண்டு முக்கிய கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களைத் தம் பக்கம் கவர அவர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு