மிகச் சிறிய புறக்கோள் கெப்லர்-37பி கண்டுபிடிக்கப்பட்டது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், பெப்பிரவரி 21, 2013

நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே மிகச் சிறிய புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கெப்லர்-37பி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்புறக்கோள் நமது நிலவை விடச் சற்றுப் பெரியதாகவும், புதன் கோளை விடச் சிறியதாகவும் உள்ளது.


நேச்சர் அறிவியல் இதழில் வெளிவந்துள்ள அறிக்கை ஒன்றின் படி, பெரும்பாலும் பாறைகளைக் கொண்ட இப்புறக்கோள் கெப்லர்-37 என்ற தனது சூரியனை 13 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. மேலும் இரண்டு புறக்கோள்கள் இதனுடன் சேர்ந்து சூரியனைச் சுற்றி வருகின்றன. மூன்று கோள்களும் தமது சூரியனை முறையே 13, 21, 40 நாட்களில் சுற்றி வருகின்றன.


நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைக்காட்டி ஊடாக புறக்கோள்கள் அவதானிக்கப்படுகின்றன. 2009 இல் விண்ணுக்கு ஏவப்பட்ட இத்தொலைக்காட்டி விண்ணின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து விண்பொருட்களை ஆராய்கிறது. கெப்லர்-37பி புறக்கோள் இதுவரை அறியப்பட்ட மிகச் சிறிய புறக்கோளை விட மூன்றில் ஒரு பங்கு அளவினதாகும். அத்துடன் சூரியக் குடும்பத்தின் மிகச் சிறிய கோளான புதனை விடச் சிறியதாகும்.


"இது போன்ற சிறிய பாறைகளைக் கண்டுபிடிப்பது விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் ஒரு பெரும் முன்னேற்றம்," என வானியற்பியலுக்கான ஹாவார்டு-சிமித்சோனியன் மையத்தைச் சேர்ந்த பிரான்சுவா பிரெசின் தெரிவித்தார்.


மூலம்

தொகு