ஐந்து புதிய உலகங்களை கெப்லர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது

செவ்வாய், சனவரி 5, 2010நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய கோள்களை நாசாவின் கெப்லர் விண் தொலைகாட்டி கண்டுபிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


கெப்லர் விண் தொலைகாட்டி

புதிய கோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம் தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங்களுக்குள் இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.


நமது சூரியக் குடும்பத்தின் நெப்டியூனை விட அளவில் பெரிதாக இருக்கும் இந்த வெளிக்கோள்களுக்கு கெப்ளர் 4b, 5b, 6b, 7b, 8b எனப் பெயரிடப்பட்டுள்ளன.


வாசிங்டன் டிசியில் அமெரிக்க வானியல் கழகம் இதனை அறிவித்தது.


இவை அனைத்தும் தமது விண்மீன்களை (சூரியனை) 3.2 முதல் 4.9 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. இவை தமது விண்மீன்களுக்கு மிகக் கிட்டவாக இருப்பதாலும், இவற்றின் விண்மீன்கள் எமது சூரியனை விட அதிக வெப்பமுடையதாக இருப்பதாலும், கெப்ளரின் புதிய வெளிக்கோள்களின் சராசரி வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


இவற்றின் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 1,200C முதல் 1,650C வரை (2,200F - 3,000F) ஆகக் காணப்படுகிறது.


நாசாவின் பில் போருக்கி என்ற வானியலாளர் "எரிமலைக் குழம்புகளை விட இந்தக் கோள்கள் மிகவும் வெப்பம் கூடியதாக இருக்கிறது," எனத் தெரிவித்தார். "உண்மையில், முதல் இரண்டு கோள்களும் காய்ச்சிய இரும்பைவிட அதிக வெப்பநிலையைக் கொண்டுள்ளன. இதனால் இங்கு உயிரினங்கள் வாழமுடியாது".


கெப்லர் விண்கலம் 2009, மார்ச் 6 ஆம் நாள் கீழைத்தேய நேரத்தின் படி 22:49 மணிக்கு (மார்ச் 7, 03:49 UTC) விண்ணுக்கு ஏவப்பட்டது.


இதுவரையில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓளிப்படக் கருவிகளில் மிகவும் பெரியதை கெப்ளர் தன்னுடன் கோண்டு சென்றது. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஒளியளவியின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது.

மூலம்

தொகு