மாலைதீவு அரசுத்தலைவர் தேர்தல்: 2ம் சுற்று வாக்கெடுப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

திங்கள், நவம்பர் 11, 2013

மாலைதீவில் நேற்று நடைபெறவிருந்த அரசுத்தலைர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்களிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று நடந்த தேர்தலில் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது நசீது 47 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனாலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான 50% வாக்குகளைப் பெறத் தவறியதால் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், தோல்வியடைந்த வேட்பாளர் அப்துல்லா யமீன், புதிய தேர்தல் பிரசாரத்திற்கு அவகாசம் கோரியதை அடுத்து தேர்தலை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.


வாக்களிப்பு செயற்பாடுகளில் மேலும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது என முகம்மது நசீதின் கட்சி மற்றும் பொது நலவாய நாடுகளின் சிறப்புக் குழு, ஐக்கிய அமெரிக்க அரசு ஆகியன வலியுறுத்தியுள்ளன. அடுத்த சனிக்கிழமையே தேர்தல் நடத்துவதற்கு உகந்த நாள் என நீதிமன்றம் கூறியுள்ளது.


மாலைதீவில் 2008 ஆம் ஆண்டு நடந்த முதலாவது சனநாயகத் தேர்தலில், முகமது நசீது அரசுத்தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். 2012 பெப்ரவரியில் நாட்டில் இடம்பெற்ற குழப்ப நிலையை அடுத்து இவர் பதவியில் இருந்து விலகினார்.


இந்நிலையில் சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் முகமது நசீத் 46.93 வீத வாக்குகளை வென்றார். முன்னாள் தலைவர் மாமூன் அப்துல் கையூமின் சகோதரர் அப்துல்லா யமீன் 29.73 வீத வாக்குகளை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கையூம் ஆட்சியில் அமைச்சராக இருந்த தொழிலதிபர் காசிம் இப்ராகிம் 23.34 வீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.


நாட்டின் அரசியலமைப்பின்படி தற்போதைய அரசுத்தலைவர் முகமது வாகித் அசனின் பதவிக்காலம் இன்று நவம்பர் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.


240,000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சனிக்கிழமை வாக்கெடுப்பில் 86 வீதமானோர் வாக்களித்தனர்.


மூலம் தொகு