மாலைதீவில் அரசியல் கலவரங்களை அடுத்து அரசுத்தலைவர் முகமது நசீட் பதவி விலகினார்
செவ்வாய், பெப்பிரவரி 7, 2012
- 6 பெப்பிரவரி 2018: மாலைத்தீவில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது
- 1 சனவரி 2014: மாலத்தீவு முதியவர்கள் வலையில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பெண்கள்
- 17 நவம்பர் 2013: மாலைதீவுகளின் அரசுத்தலைவராக அப்துல்லா யமீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 11 நவம்பர் 2013: மாலைதீவு அரசுத்தலைவர் தேர்தல்: 2ம் சுற்று வாக்கெடுப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
- 8 அக்டோபர் 2013: மாலைதீவு அரசுத்தலைவர் தேர்தல் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மாலைதீவுகளில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களையும், காவல்துறையினர் சிலரின் கிளர்ச்சிகளையும் அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் முகமது நசீட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அரசுத் தொலைக்காட்சியில் இன்று தோன்றி உரையாற்றிய முகமது நசீட், "நாட்டின் தற்போதைய நிலையில் தாம் பதவி விலகுவதே சிறந்தது," எனக் கூறினார். பிரதி அரசுத்தலைவர் முகமது வாகித் அசனிடம் அவர் தனது பதவியைக் கையளிப்பார் எனக் கருதப்படுகிறது.
முன்னதாக கிளர்ச்சியில் ஈடுபட்ட காவல்துறையினர் சிலர் தலைநகர் மாலேயில் உள்ள அரசு ஒலிபரப்பு நிலையத்தைக் கைப்பற்றி, முன்னாள் அரசுத்தலைவர் மாமூன் அப்துல் கயூமிற்கு ஆதரவான பிரசாரத்தை மேற்கொண்டிருந்தனர். பல ஊடகவியலாளர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்துல் கயூமின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க இராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக நேற்று திங்கட்கிழமை சுமார் 50 காவல்துறையினர் மெலிட உத்தரவுகளை நிராகரித்துப் பணித்துறப்பு செய்தனர்.
கடந்த மாதம் அப்துல்லா முகமது என்ற மூத்த நீதிபதியை மாலைதீவுகளின் இராணுவத்தினர் கைது செய்ததை அடுத்து அங்கு வீதி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின. எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரை சிறையில் இருந்து விடுவித்த அவரது முடிவு அரசியல் நோக்கமானது என அவர் மீது குற்றம் சாட்டியது.
முன்னாள் மனித உரிமை ஆர்வலரான முகமது நசீட் 2008 ஆம் ஆண்டு முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பதவியில் இருந்த அப்துல் கையூமை தேர்தலில் வென்று அரசுத் தலைவரானார். ஆனாலும் நசீடை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்ததால் அவருக்கு அரசியல் ரீதியாக பெரும் நெருக்கடி இருந்து வந்தது.
மூலம்
தொகு- Maldives President Mohamed Nasheed resigns amid unrest, பிபிசி, பெப்ரவரி 7, 2012
- Trouble in paradise: Maldives president quits after protests, எம்எஸ்என், பெப்ரவரி 7, 2012
- Maldives president resigns after police mutiny, யாஹூ!, பெப்ரவரி 7, 2012