மாலைதீவு அரசுத்தலைவர் தேர்தல் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய், அக்டோபர் 8, 2013
- 6 பெப்பிரவரி 2018: மாலைத்தீவில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது
- 1 சனவரி 2014: மாலத்தீவு முதியவர்கள் வலையில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பெண்கள்
- 17 நவம்பர் 2013: மாலைதீவுகளின் அரசுத்தலைவராக அப்துல்லா யமீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 11 நவம்பர் 2013: மாலைதீவு அரசுத்தலைவர் தேர்தல்: 2ம் சுற்று வாக்கெடுப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
- 8 அக்டோபர் 2013: மாலைதீவு அரசுத்தலைவர் தேர்தல் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மாலைதீவில் செப்டம்பர் 7 இல் இடம்பெற்ற முதற்கட்ட அரசுத்தலைவர் தேர்தல் செல்லாது என அறிவித்திருக்கும் அந்நாட்டு உச்சநீதிமன்றம், புதிய தேர்தல் அக்டோபர் 20 இல் இடம்பெற வேண்டும் எனக் கூறியுள்ளது.
முன்னதாக, தேர்தல் முறைபாடுகள் கிளம்பியதை அடுத்து இரண்டாம் கட்ட வாக்கெடுப்புகளை நீதிமன்றம் தள்ளிப் போட்டிருந்தது. கடந்த ஆண்டு பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்ட முகம்மது நசீத் சென்ற மாதம் இடம்பெற்ற தேர்தலில் 45% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 50% வாக்குகளைப் பெற வேண்டும். இரண்டாவதாக வந்த அப்துல்லா யமீன் 25% வாக்குகளைப் பெற்றார். இவர் முன்னாள் அரசுத்தலைவர் மாமூன் அப்துல் கயூமின் உறவினர் ஆவார். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் முதலாவது சுதந்திரமான தேர்தலில் நசீத் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார்.
கடந்த மாத வாக்கெடுப்பில் மூன்றாவதாக வந்த காசிம் இப்ராகிம் தேர்தல் செல்லாது என அறிவிக்ககோரி வழக்கௌப் பதிவு செய்தார். ஆனாலும், தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடைபெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறியிருந்தனர்.
இதற்கிடையில், முகமது நசீதுக்கு ஆதரவளிக்கும் தொலைக்காட்சி நிலையம் ஒன்று நேற்று இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டது.
மூலம்
தொகு- Maldives court annuls presidential election result, பிபிசி, அக்டோபர் 7, 2013
- Fresh turmoil in The Maldives as election results are annulled, இன்டிபென்டென்ட், அக்டோபர் 8, 2013