மாலைதீவுகள்: முகமது நசீதின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், ஐநா சிறப்புத் தூதர் மாலே விரைந்தார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, பெப்பிரவரி 10, 2012

இவ்வாரம் பதவியில் இருந்து விலகிய மாலைதீவுகளின் முன்னாள் அரசுத்தலைவர் முகமது நசீதின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரும் பாதுகாப்புக்கருதி இலங்கை வந்துள்ளனர். நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இலங்கை வந்த யூ.எல்- 102 என்ற விமானத்திலேயே இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


நசீத் பதவி விலகியதையடுத்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் முகமது வாகித் அசன், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களை நியமித்துள்ளார். பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சுமார் 20 காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டதாக உட்துறை அமைச்சர் முகமது ஜமீல் அகமது தெரிவித்தார். கிளர்ச்சியில் ஈடுபட்ட முகமது நசீதும் தாக்குதல்களில் காயமடைந்துள்லதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தாம் கட்டாயமாகப் பதவியில் இருந்து விலகும்படி வற்புறுத்தப்பட்டதாக முகமது நசீத் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


முகமது நசீதைக் கைது செய்யுமாறு முன்னதாக மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. தன்னைக் கைது செய்ய மாலைதீவு காவல்துறை தயாராகி வருவதாகவும் தான் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் நசீத் நேற்று தெரிவித்திருந்தார். இதேவேளை மாலைதீவின் முன்னாள் அரசுத்தலைவரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளதாக அதிபர் முகமது வாகித் அசன் அறிவித்துள்ளார்.


இதற்கிடையில், மாலைதீவுகளில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்ப நிலையை அடுத்து ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் ஒஸ்கார் பெர்னாண்டசு-தரான்கோ மாலே வந்து சேர்ந்துள்ளார். இவர் முன்னாள் மற்றும் தற்போதைய அரசுத்தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அனைவரையும் அமைதி காக்கும்படி அவர் வேண்டியுள்ளார்.


நீதிபதி அப்துல்லா முகமது என்பவர் சென்ற மாதம் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நாட்டில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை அடுத்து முகமது நசீது தாம் பதவி விலகினார். இதனையடுத்து பிரதி தலைவராக இருந்த வாகித் அசன் புதிய தலைவராகப் பதவியேற்றார்.


மூலம்

தொகு